திமுக ஆதரவு தமிழறிஞர்களுக்கு மட்டுமே கனவு இல்லத் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக
குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்குவதை தாய்மொழிக்கு செய்யும் தொண்டாக தமிழ்நாடு அரசு பல ஆண்டு காலமாக மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, திருவள்ளுவர் விருது, மகாகவி பாரதியார் விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, உமறுப் புலவர் விருது, ஜி.யு. போப் விருது, அம்மா இலக்கிய விருது, காரைக்கால் அம்மையார் விருது என பல விருதுகள் தமிழக அரசால் தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
திமுக அரசு பொறுப்பேற்றதும், ‘கனவு இல்லத் திட்டம்’ என்ற ஒரு திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தின்படி சாகித்திய அகாடமி விருது, ஞானபீட விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தொல்காப்பியர் விருது, கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது மற்றும் தமிழ் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு விருதினைப் பெற்ற தமிழ் அறிஞர்களுக்கு தமிழகத்திற்குள் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் தமிழக அரசு மூலமாக வீட்டு வசதி வாரியத்தில் உயர் வருவாய் குடியிருப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒரு நிதியாண்டிற்கு அதிகபட்சம் பத்து விருதாளர்கள் என கடந்த இரண்டு ஆண்டுகளில் இருபது விருதாளர்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
திமுக அரசு சாலைகளை பராமரிப்பதில் அக்கரை காட்டவேண்டும்
இந்தத் திட்டத்தின்படி ஒரு சில விருதுகளை, குறிப்பாக மத்திய அரசின் விருதுகளைப் பெற்றவர்கள் மட்டுமே, ஒரு சாரார் மட்டுமே குடியிருப்பினை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், திமுக ஆதரவு தமிழறிஞர்கள் மட்டுமே பயன்பெறும் நிலை உள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்லாமல் ஒருதலைபட்சமானதும்கூட.
தமிழக அரசால் தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வரும் பாரதிதாசன் விருது, பாரதியார் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது போன்றவற்றை பெற்றவர்கள் கனவு இல்லத் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழ் அறிஞர்கள்மீது பாரபட்சம் காட்டுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
மாநில சுயாட்சி என்று சொல்லிக் கொண்டு, மாநில விருது பெற்றவர்களை ஒதுக்குவது நியாயமற்ற செயல். பாரதிதாசன் விருது, பாரதியார் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது போன்ற தமிழ்நாடு அரசின் விருதுகளைப் பெற்றவர்களும் கனவு இல்லத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் அறிஞர்களிடையே உள்ளது.
தமிழ் அறிஞர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தமிழக அரசின் விருதுகளைப் பெற்றவர்களும் கனவு இல்லத் திட்டத்தில் சேர்ந்து பயனடைய வழிவகுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.