இம்பால்: மணிப்பூரில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வன்முறை தொடர்ந்து வரும் நிலையில் முதல்வர் பீரன் சிங் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இந்நிலையில் தான் அவரது ராஜினாமா கடிதத்தை ஆதரவாளர்கள் கிழித்தெறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலமாக மணிப்பூர் உள்ளது. கடந்த ஆண்டு இங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இதன்மூலம் மணிப்பூரில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் குக்கி இனக்குழுவினரைப் போல தங்களையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என மைத்தேயி பிரிவு மக்கள் வலியுறுத்தினர். இதற்கு குக்கி இனக்குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக கடந்த மே மாதம் 3ம் தேதி மணிப்பூரில் ஊர்வலம் நடந்தது.
இந்த ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. கடந்த 50 நாட்களாக மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இன மக்களுக்கு இடையேயான மோதல் வன்முறையாக மாறி தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் உயிருக்கு பயந்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். மத்திய இணையமைச்சர், மாநில அமைச்சர் உள்பட அரசியல்கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டு வருகிறது.
வன்முறையை கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று எடுத்த முயற்சிகள் அனைத்தும் கைக்கொடுக்கவில்லை. இதற்கிடையே வன்முறைக்கு பாஜக தான் காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து அமைதி காத்து வரும் நிலையில் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி வன்முறை பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார். இதுவும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ராகுல் காந்தி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களுக்கு சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.
மணிப்பூரில் தற்போதும் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. மேலும் இண்டர்நெட் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ், ராணுவம் என 50 ஆயிரம் பேர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு மணிப்பூர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் கலவரம் குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றியும் அமித்ஷா விவாதித்தார். இதற்கிடையே தான் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மணிப்பூர் முதல்வர் பீரன் சிங் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் இன்று மதியம் 1 மணியளவில் அவர் ஆளுநர் அனுசுயா உகேவிடம் ராஜினாமா கடிதத்தை பீரன் சிங் வழங்க உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டு முன்பு ஆதரவாளர்கள் குவிந்தனர்.
பீரன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி ஆளுநரிடம் வழங்க கடிதம் தயார் செய்திருந்தார். இதை பற்றி அறிந்த அவரது ஆதரவாளர்கள் அந்த கடித்ததை கிழித்தெறிந்தனர். மேலும் அவர் எந்த காரணத்தை கொண்டும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது என தெரிவித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் கூட இன்று மதியம் 3.30 மணிக்கு பீரன் சிங் ஆளுநர் அனுசுயா உகேவை சந்தித்தார். இந்த சந்திப்பின் முடிவில் என்ன நடக்கிறது? என்பது தெரியவில்லை. முன்னதாக பாஜக தலைமை மற்றும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் அறிவுரைப்படி பீரன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்கு பொறுப்பேற்று பீரன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
இதன்மூலம் வன்முறையை கட்டுக்குள் வரலாம் என பாஜக மேலிடம் நினைக்கிறது. அதன்பிறகு சிறிது நாட்கள் கழித்து புதிதாக ஒருவரை முதல்வராக தேர்வு செய்யவும் கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பீரன் சிங் ராஜினாமாவுக்கு பிறகும் கூட வன்முறை தொடர்ந்தால் அங்கு ஆட்சியை கலைக்கும் திட்டம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ஆட்சி கலைப்பு என்பது வன்முறையை கட்டுப்படுத்த முடியாதநிலையில் கடைசி அஸ்திரமாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் பீரன் சிங் ராஜினாமா செய்வதன் பின்னணியில் உள்ள இன்னொரு முக்கிய காரணமும் வெளியாகி உள்ளது. அதாவது தற்போதைய மணிப்பூர் வன்முறை தொடர்ந்து நடந்தால் அது நாடாளுமன்ற தேர்தலில் கூட எதிரொலிக்கலாம். குறிப்பாக எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனையை கையில் எடுத்து பிரசாரம் செய்யலாம்.
இதனால் முதற்கட்டமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும்படி பாஜக மேலிடம் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என பாஜக கணக்கீட்டுள்ளதாக கூறப்படுகிறது.