தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தங்களை, ஒப்பந்தப் பணியாளர்களாக பணியமர்த்த வேண்டும். சட்ட விரோதமாக செயல்படும் டெண்டர் முறையினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பணியின்போது தங்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும். ஊதிய விகிதத்தை உயர்த்தி மாதந்தோறும் 3-ம் தேதிக்குள் தங்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, நகராட்சி அலுவலகத்திற்குள் அமர்ந்து கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்தப் போராட்டத்துக்கு நகர்மன்ற உறுப்பினர் சதா.சிவக்குமார் (விசிக) தலைமை வகித்தார்.
போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் நகராட்சி (பொறுப்பு) ஆணையர் குமார், நகர் மன்றத் தலைவர் சண்முகப்பிரியா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். பேச்சுவார்த்தைக்கும் பிறகும் தூய்மைப் பணியாளர்களின் கஞ்சி தொட்டி போராட்டம் தொடர்கிறது.