பெல்லன்வில விகாரையின் 2023 ஆம் ஆண்டிற்கான எசல பெரஹெர நிகழ்விற்கு அரச அனுசரணை

புரதான பெல்லன்வில ரஜமஹா விகாரையின் 2023 ஆம் ஆண்டின் எசல பெரஹெர நிகழ்வுகள் அரச அனுசரணைடன் இடம்பெறவுள்ளன.

பெல்லன்வில விகாரையின் எசல நிகழ்வுகள் 73ஆவது முறையாக ஓகஸ்ட் 02 முதல் 20 வரையில் இடம்பெறவுள்ளன.

இதன் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் (28) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

பெல்லன்வில ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வண. பெல்லன்வில தம்மரத்தன தேரரின் வழிகாட்டல் மற்றும் அறிவுரையின் கீழ் விகாரையின் எசல பெரஹெர குழுவினால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

பெரஹெராவிற்காக வருடாந்தம் வளங்களை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இம்முறையும் நிகழ்வுகளை சிறப்பான முறையில் நடத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.

1950 ஆம் ஆண்டில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட பெல்லன்வில விகாரையின் புண்ணியதான நிகழ்வு மற்றும் பெரஹெர என்பன மறைந்த வண ஸ்ரீ சோமரதன நாயக்க தேரரினால் ஆரம்பிக்கப்பட்டதாகும். தேசத்திற்கு ஆசி வேண்டி தொடர்ச்சியாக இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பெல்லன்வில விகாரையின் விகாராதிபதி கலாநிதி வண. பெல்லன்வில தம்மரத்தன தேரர், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான காமினி லொக்குகே, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க

உள்ளிட்டோரும் பெல்லன்வில எசல பெரஹெர குழுவிற்கு வருடாந்தம் நன்கொடைகளை வழங்கிவரும் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.