டேராடூன்: எங்கள் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடாகும். இந்தியாவில் கிரிமினல் சட்டங்கள் ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால், சிவில் விவகாரங்களில் அப்படி இல்லை. சிவில் சட்டங்கள் என்பது மதங்களைப் பொறுத்து மாறுகிறது. இந்த நிலையை மாற்றி நாடு முழுக்க ஒரே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது பாஜகவின் திட்டங்களில் ஒன்றாகும்.
2024 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் நாட்டில் பொது சிவில் சட்ட விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. பிரதமர் மோடியே அண்மையில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பேசினார். இரண்டு வகையான சட்டங்களை கொண்டு நாட்டை நடத்த முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைவரும் சமம் என்றும் குறிப்பிட்டனர்.
எனவே, நாடு முழுக்க ஒரே பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பேசியிருந்தார். பொது சிவில் சட்டத்தை அப்பட்டமாக ஆதரித்து பேசிய பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. மத்தியில் ஆளும் பாஜக இந்த விவகாரத்தை தற்போது கையில் எடுத்து இருப்பதால் தற்போது பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் உத்தரகாண்டில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டம் தொடர்பாக அமைக்கப்பட குழுவானது வரைவு அறிக்கையை தயார் செய்து இருப்பதாக இன்று கூறியிருந்த நிலையில் புஷ்கர் தாமி சிங் தனது ட்விட்டரில் பொது சிவில் சட்டம் குறித்து பதிவிட்டு இருக்கிறார்.
புஷ்கர் சிங் தாமி கூறுகையில், ” நாங்கள் மக்கள் அளித்த வாக்குறுதிகளின் படி இன்று பொது சிவில் சட்டம் குறித்து வரைவு ஒன்றை தயாரிக்க அமைக்கப்பட்ட குழு அறிக்கையை சமர்பித்துள்ளது. விரைவில் தேவ்பூமியான உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்” என்றார்.