இம்பால்: மணிப்பூரில் இனக் கலவரம் மூண்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடிவுறும் நிலையில் அம்மாநில முதல்வர் என். பைரன் சிங் தனது பதவியை இன்று (ஜூன் 30) ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மதியம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அனுசுயா உய்கியிடம் ஒப்படைப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதம் தொடங்கியதிலிருந்தே மணிப்பூர் மாநிலம் வன்முறை பூமியாகப் பற்றி எரிகிறது. காரணம் மேதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையேயான மோதல். இதில் பல்வேறு ஆயுதக் குழுக்களும் களமிறங்கியுள்ளன.
மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மேதேயி சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் குகி பழங்குடியினர். கடந்த மே மாதம் முதன்முதலாக நடந்த அமைதிப் பேரணியில் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இது வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பரவி இரண்டு மாதங்களாகப் பற்றி எரிகிறது. இந்த இனக் கலவரத்தில் இதுவரை 100 பேர் பலியாகியுள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மணிப்பூரில் மீண்டும் வன்முறைப் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தச் சூழலில் முதல்வர் என்.பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசிடமிருந்து வந்த அழுத்தத்தின் பேரில் பைரன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிகிறது. கடந்த 26 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மணிப்பூர் வன்முறையில் பிரதமரின் மவுனத்தைக் கண்டித்ததோடு மாநிலத்தின் முதல்வர் பைரன் சிங்கை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.