"மறக்க முடியுமா உங்களை.." ஓய்வுபெற்ற இறையன்பு ஐஏஎஸ்.. ஸ்டாலின் எழுதிய நெகிழ்ச்சி மடல்!

சென்னை:
தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து இன்று ஓய்வுபெற்ற இறையன்புக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

அன்புள்ள இறையன்பு அவர்கட்கு, வணக்கம். அன்பும் பண்பும் நிறைந்த சகோதரர் திரு. வெ. இறையன்பு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பணி ஓய்வு பெற்று செல்லும் இன்றைய தினம் என்பது தங்களது நிர்வாகப் பணிகளுக்கான ஓய்வே தவிர, சமூக இலக்கிய பணிகளுக்கான ஓய்வு அல்ல என்பதை தாங்களும் அறிவீர்கள். அந்த வகையில், எதிர்வரும் காலத்திலும் தங்களது சமூக – இலக்கிய – ஆய்வு பணிகளை தொய்வின்றி தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மிக நெருக்கடியான கோவிட் பெருந்தொற்று சமயத்தில் கழக ஆட்சி அமைந்த போது, நிர்வாகத் துறையில் தலைமைப் பொறுப்பான தலைமைச் செயலாளர் பொறுப்பை தாங்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டு வேகமாகவும், விவேகமாவும் செயல்பட்டீர்கள். கடந்த இரண்டு ஆண்டு காலமாக அரசின் அனைத்து முன்னெடுப்புகளையும் முடுக்கிவிட்டு தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு தங்களது சிந்தனை, செயல் ஆகிய இரண்டையும் பயன்படுத்தினீர்கள்.

குறிப்பாக, சென்னை வெள்ள நிவாரணப் பணிகளின்போதும், உலக சதுரங்க ஒலிம்பியாட் போட்டியினை அனைத்துத் தரப்பினரும் பாராட்டும் வகையில் நடத்தி முடித்திடவும் தங்கள் பங்களிப்பு மகத்தானது. மேலும், விடுமுறை நாட்களிலும் தாங்கள் கள ஆய்வுகளை மேற்கொண்டு, அலுவலர்களை வழிநடத்திய விதம் போற்றுதலுக்குரியது. இன்றைக்கு இந்தியாவே தலைநிமிர்ந்து பார்க்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்க, தங்களது வழிகாட்டுதல்களும், நிர்வாகத் திறமையும், துறை ஒருங்கிணைப்பும் மிகமிக முக்கியமான அடித்தளமாக அமைந்திருந்தது.

தங்களது இரண்டு ஆண்டுப் பணி என்பது, தமிழ்நாடு காலம் காலமாக நினைவுகூரக் கூடிய பணியாக அமைந்திருந்தது. இதற்கு தமிழ்நாடு அரசும், குறிப்பாக தனிப்பட்ட முறையில் நானும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இனிவரும் எதிர்கால இளைய தலைமுறை அலுவலர்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்து வந்திருக்கிறீர்கள். பல்துறை ஆற்றல் கொண்ட தாங்கள், தொடர்ந்து இந்த மாநிலத்துக்கும் மனித குல மேம்பாட்டுக்கும் அருந்தொண்டாற்றி வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தனது கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.