புதுச்சேரி:
மாட்டு இறைச்சியை சாப்பிடுவதே பெரும் பாவம் என பாஜக கூறி வரும் நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மீன் இறைச்சியை சைவ உணவு வகைகளுடன் சேர்க்க வேண்டும் என பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதலாக மாட்டு இறைச்சி மீது ஒருவித பிம்பத்தை அக்கட்சியினர் கட்டமைத்தனர். அதாவது, இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுக்களை சாப்பிடக் கூடாது என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக “பசு காவலர்கள்” என்ற பெயரில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிலர் குழுக்களாக செயல்படுவதும், மாடுகளை விற்க செல்பவர்களை தாக்குவதுமாக உள்ளனர். இதில் பலர் உயிரிழந்தும் உள்ளனர். உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாட்டிறைச்சி கடைகளுக்கு தடையும் விதிக்கப்பட்டிருக்கின்றன.
இது ஒருபுறம் இருக்க, புதுச்சேரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
மீன் சாப்பிடுவதால் மீனவர்களுக்கு நாம் நல்லது செய்கிறோம் என்று சொல்கிறோம். ஆனால், மீன் நமக்கு எவ்வளவு நல்லது செய்கிறது என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். மீன் சாப்பிட்டால் எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கலாம். இளமையாக இருக்கலாம். நோய் நொடி இல்லாமல் இருக்கலாம். மேற்கு வங்கத்து மக்கள், மீன் உணவை அசைவ உணவாக பார்க்கவில்லை. சைவ உணவாகவே பார்க்கிறார்கள்.
நமக்கே முட்டை சைவமா அசைவமா என்ற சந்தேகம் உள்ளது. நாம் முட்டை சாப்பிட வேண்டும் என்றால் அதை சைவம் எனக் கூறுவோம். அதுவே முட்டை வேண்டாம் என்றால் அதை அசைவம் எனக் கூறுவோம். இதை பார்க்கும் போது எனக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. அதாவது, முட்டையை சைவம் என்று சொல்லி பலர் சாப்பிட தொடங்குவதை போல, மீன் இறைச்சியையும் சைவம் என்று சொல்லிவிட்டால் இன்னும் பலர் மீனை சாப்பிட ஆரம்பிப்பார்கள். இதனால் மீனவர்கள் மேலும் பயனடைவார்கள்.
மீன் உற்பத்தி 70 கோடி டன்னை தாண்ட வேண்டும் என நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, வெளிநாட்டுக்கு உற்பத்தி 1 லட்சம் கோடியை தாண்ட வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். எனவே, மீன் இறைச்சியை சைவத்தில் சேர்த்தால் இந்த இலக்கையும் நாம் அடைய முடியும். இவ்வாறு தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.