மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் கடந்த 3 வாரங்களாக நீடிக்கும் தீவிர வெப்ப அலையினால் 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெக்சிகோ சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “மெக்சிகோவின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த மூன்று வாரங்களாக வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. குறிப்பாக ஜூன் 18 முதல் 24 வரை மெக்சிகோவில் அதிதீவிர வெப்பம் பதிவாகி இருக்கிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. தீவிர வெப்பஅலை காரணமாக இதுவரை 100க்கும் அதிகமானவர்கள் பலியாகி இருக்கிறார்கள் . இதில் 64% இறப்புகள் நுவோ லியான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் வெப்ப அலைக்கு ஒருவர் மட்டுமே பலியாகி இருந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித செயல்பாடுகளால் பூமியின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வழக்கத்துக்கும் அதிகமான வெப்பநிலை உலக நாடுகளில் பதிவாகி வருகிறது. காலநிலை மாற்றம் நம் கண் முன்னே அரங்கேறி வருகிறது. உலகெங்கிலும் லட்சக்கணக்கான வன விலங்குகள், அவற்றின் பாதிப்பை உணர்ந்து வருகின்றன. மனிதர்களும் அதன் தீவிரவத்தை கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு பூமி வெப்பமடைதலை குறைப்பதற்கான செயல்பாடுகளை விரைவாக நகர்த்த வேண்டிய சூழலில் மனித இனம் உள்ளது என்ற எச்சரிக்கையை சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.