புதுடெல்லி: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியது: ராகுல் காந்தி 2 நாள் மணிப்பூர் பயணத்தை இன்று தொடங்கி வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ளவுள்ளார். அப்போது, வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர் ஆறுதல் தெரிவிக்கிறார். கடந்த இரண்டு மாதங்களாக மணிப்பூர் வன்முறை களமாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில், பதற்றத்தை தணிக்கும் வகையில் ராகுல் காந்தியின் இந்த பயணம் அமையும்.
மாநிலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதில் முதல்வர் பிரேன்சிங் மற்றும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்துவிட்டது. பிரதமர் இந்த விவகாரத்தில் மவுனம் சாதித்து வருகிறார். பிரேன் சிங் தலைமையிலான அரசை அகற்றாதவரை மாநிலத்தில் அமைதி திரும்ப வாய்ப்பில்லை என காங்கிரஸ் தலைவர் கார்கே திட்டவட்டமாக கூறி வருகிறார். பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் ராகுல் காந்தி மணிப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது அங்கு பதற்றம் தணிவதற்கு வழிவகுக்கும். அத்துடன் இந்த விவகாரத்தில் மோடி எதிர்வினையாற்றவும் தூண்டுகோலாக இருக்கும். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் நடத்தப்பட்டதை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்தது. வெறும் சம்பிரதாயத்துக்காக மட்டுமே இந்த கூட்டம் நடைபெற்றதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
ராகுலுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் மணிப்பூர் செல்ல வாய்ப்புள்ளது. இருப்பினும், நிவாரண முகாம்களை பார்வையிட ராகுலுக்கும், அவர் உடன் செல்லும் பிரதிநிதிகளுக்கும் மாநில அரசு அனுமதி அளிக்குமா என்ற சந்தேகம்எழுந்துள்ளது.