லக்னோ: வளர்ச்சிக்கான பாதையில் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு இழப்பீடு வழங்க வழிவகை செய்யும் புதிய திட்டம் உட்பட 32 திட்டங்களின் பரிந்துரைக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்திருக்கிறார். இதன் பின்னர் பேசிய அவர், “கடந்த 60 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாத சாதனைகளை பாஜக அரசு செய்திருப்பதை எப்படி மறுக்க முடியாதோ அதேபோல இந்த 7 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு செய்துள்ள சாதனைகளையும் மறுக்க முடியாது.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இங்கு மாஃபியாக்களின் ஆட்சிதான் நடந்துக்கொண்டிந்தது. மாஃபியாக்கள் தலையிடாத தொழில்களே இல்லை. அனைத்திலும் இவர்களின் ஆதிக்கம் நிறைந்திருந்தது. ஆனால் இன்று, இந்த மாஃபியாக்கள் தங்கள் உயிருக்காக அரசாங்கத்திடம் மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கழுத்துகளில் வழக்குப்பதிவின் விவரங்கள் அடங்கிய பலகைகளை மாட்டிக்கொண்டு திரிந்துக்கொண்டிருக்கிறார்கள்.
காவல்துறையினர் இவர்கள் மீதான பிடியை இறுக்கியிருக்கிறது. இந்த அரசு ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்கிற தாரக மந்திரத்துடன் பயணித்துக்கொண்டிருக்கிறது. அதாவது நாங்கள் சமரசத்தை விட வளர்ச்சிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு எங்கள் கொள்கையின் வெளிப்பாடுதான். இந்த மாநாட்டின் மூலம் சுமார் ரூ.35 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
இந்த முதலீடுகள் மூலம் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உத்தரப் பிரதேசத்தை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளன. இந்த நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதற்கு மாநிலத்தின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சரியாக சொல்வதெனில் முன்னெப்போதையும் விட இந்த பட்ஜெட் கூட்டத்தில் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமான பெரும் நிறுவனங்கள் தங்கள் தொழிலை பெருக்க முடியும். அதேபோல சிறு குறு நிறுவனங்களும் பெருமளவு பயனடையும்” என்று கூறியுள்ளார்.