வியாபாரிகளுக்கு சிக்கல்: இனிமேல் இதற்கும் கட்டணமா? வலுக்கும் எதிர்ப்பு!

தமிழ்நாட்டில் கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர் பலைகளுக்கு கட்டணம் வசூலிக்க உள்ளாட்சி அமைப்புகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழில் பெயர் பலகைகள் வைக்கும் வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். அந்த கட்டணத்தை தமிழக அரசே உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வணிகப் பெயர்ப்பலகைகளுக்கு கட்டணம் தண்டலிக்க உள்ளாட்சி அமைப்புகள் முடிவு செய்திருப்பதாகவும், அது தொடர்பான கலந்தாய்வுகள் நடத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

உள்ளாட்சி அமைப்புகளின் இந்த முடிவுக்கு வணிகர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் ஏற்கத்தக்கதல்ல.

அதேநேரத்தில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் ஆதாரங்கள் பெருமளவில் குறைந்து விட்டன. பெரும்பான்மையான உள்ளாட்சி அமைப்புகள் கடன் வாங்கித் தான் குப்பை அள்ளுவது உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற வேண்டியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் நிலையிலிருந்து பார்க்கும் போது இந்தக் கட்டண உயர்வு சரியானதாகவே தோன்றும். இத்தகைய சூழலில் இரு தரப்பினருக்கும் பாதிப்பு இல்லாமல் தீர்வு காண வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.

ஆளே இல்லாத கடையில் யாருக்காக டீ ஆத்துவது போல விற்பனை ஆகாத மது கடைகளை மூடும் திமுக

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை முதன்மையாக தமிழிலும், அடுத்து ஆங்கிலத்திலும், அதைத் தொடர்ந்து பிற மொழிகளிலும் எழுத வேண்டும் என்று அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த அரசாணைகள் பெரும்பான்மையான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களால் கடைபிடிக்கப்படுவதில்லை. இதை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்திருப்பதுடன், தமிழில் பெயர்ப்பலகை அமைக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அதிக தண்டம் விதிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது. தமிழைத் தேடி பயணத்தின் போதும், அதற்குப் பிறகும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை தமிழில் அமைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருவதன் பயனாக, இது குறித்த அரசாணையை செயல்படுத்தும்படி தமிழக அரசும் வணிகர்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.

வணிகப்பெயர்ப்பலகைகளுக்கு கட்டணம் தண்டலிக்க உள்ளாட்சி அமைப்புகள் முடிவு செய்துள்ள நிலையில், அதை தமிழ்ப் பெயர்ப்பலகைகளை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பாக தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசாணையின்படி தமிழை முதன்மைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள வணிகப் பெயர்ப்பலகைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அந்தக் கட்டணத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசே செலுத்த வேண்டும். வணிகர்களும் தாங்களாக முன்வந்து தங்கள் கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழில் எழுத வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.