இசையமைப்பாளர் மிஷ்கின்… இயக்குநர், நடிகர் எனத் தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்துவரும் மிஷ்கின், இப்போது இசையமைப்பாளராகப் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார்.
‘சவரக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநரும், மிஷ்கினின் தம்பியுமான ஆதித்யாவின் அடுத்தப் படம் ‘டெவில் (Devil)’. விதார்த், பூர்ணா, சுபாஸ்ரீ உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மிஷ்கின் இசையமைத்து தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்களையும் அவரே எழுதி, இசையமைத்துள்ளார்.
அண்மையில் இப்படத்தின் ‘கலவி’ எனும் பாடல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இசையமைப்பாளராகப் பயணத்தைத் தொடங்கியிருக்கும் மிஷ்கினிடமே திரையிசை அனுபவம் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று தொடர்பு கொண்டோம்.
உங்களின் இந்த திரையிசைப் பயணம் எப்படி தொடங்கியது?
என் தம்பிக்காகத்தான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறேன். இளையராஜா பாடல்களை சின்ன வயதிலிருந்து கேட்டுட்டு இருக்கேன். அதெல்லாம் மனசில் அப்படியே இருக்கிறது. அதுமட்டுமின்றி, 25 வருடமாக வெஸ்டர்ன் க்ளாசிகல் கேட்கிறேன். 3 வருடமாக வெஸ்டர்ன் க்ளாசிகல் படிச்சிட்டு இருக்கேன். இப்போ, என்னோட மாஸ்டர் ராம மூர்த்தி ராவ் கிட்ட ஒரு எட்டு மாதங்களாக இந்துஸ்தானி இசை படிச்சிட்டு இருக்கேன். இவையெல்லாம் நான் இசையமைக்கத் தூண்டுதலாக இருந்தன.
இசையைக் கற்றுக் கொண்டாலும், முதல்முறையாக இசையமைக்கும்போது என்ன மாதிரியான சாவல்களை எதிர்கொண்டீர்கள்?
சின்ன வயசிலிருந்து திரைப்பட இசையை ஆழமாகக் கவனித்து வருகிறேன். நிறைய ஹாலிவுட் படங்களின் இசையை ஆய்வு செய்திருக்கிறேன். சினிமாவைவிட மியூசிக் ரொம்பப் பிடிக்கும். ஆனால், நான் இசையமைக்க ஆரம்பிக்கும்போது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. எது கஷ்டமான விஷயமோ அதைச் செய்வதுதான் என் இயல்பு. அதனால் இதைச் சவாலாக எடுத்துக் கொண்டேன். இரவு பகல் என 24 மணிநேரம் இதற்காக நேரத்தை ஒதுக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட 3 வருடம் இதற்காக வேலை செய்திருக்கிறேன்
உங்கள் நண்பர் பாடலாசியர் கபிலன் இருக்கையில் இப்படத்தின் ஐந்து பாடல்களையும் நீங்களே எழுதியிருக்கிறீர்கள். ஏன்?
இசையமைக்கும்போதே நல்ல பாடல் வரிகள் அமைந்துவிட்டன. என் தம்பிக்கும் ரொம்பப் பிடித்துவிட்டது. அதனால், இப்படத்தில் வரும் ஐந்து பாடல்களையும் நானே எழுதிவிட்டேன். என் நீண்டகால நண்பர் கல்யாண் இதற்கு வைலினிஸ்டாகப் பணியாற்றியிருக்கிறார். இருப்பினும், என்னுடைய அடுத்தப் படத்தின் எல்லா படல்களையும் கபிலன்தான் எழுதுவார்.
உங்கள் பாடலைக் கேட்டு யாரெல்லாம் வாழ்த்தினார்கள்?
இப்பாடலை முதலில் தியாகராஜா குமாரராஜாவிற்குத்தான் அனுப்பினேன். பிறகு நித்யா மேனன், ராம், வெற்றிமாறன், கருணாகரன் என நண்பர்கள் எல்லோருக்கும் அனுப்பினேன். எல்லோரும் பாடல் நல்லா இருக்குனு சொல்லியிருக்காங்க!
இளையராஜா சாருக்கு உங்கள் பாடலை அனுப்பி, பாடல் பற்றி ஏதுவும் பேசினீர்களா?
இளையராஜா என் குரு. இசைஞானி. நான் ஏதோ சின்ன பையன் மாதிரி கிறுக்கிட்டு இருக்கேன். அதுமட்டுமில்லாமல் இருவருக்கும் சண்டை. அவரிடம் பேசி ரொம்ப நாள் ஆச்சு.
டெவில் (DEVIL) படம் ஒரு பேய்க் கதையா?
‘டெவில்’ படம் பேயைப் பற்றியதில்லை. ஒரு பெண்ணைப் பற்றியக் கதை. இது என்னுடைய கதை இல்லை. முழுக்க முழுக்க என் தம்பியின் கதை!