100ஐக் கடந்த 2023ன் அரையாண்டு தமிழ் சினிமா : 10/100 தான் வெற்றியா?

2023ம் ஆண்டின் அரையாண்டு இன்றுடன் முடிவடைகிறது. இந்த ஆறு மாத காலத்தில் தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இந்த 100 படங்களில் முன்னணி நடிகர்கள் மற்றும் அடுத்த கட்ட நடிகர்கள், கொஞ்சம் பிரபலமான நடிகர்கள் நடித்த படங்கள் எனப் பார்த்தால் 20 படங்கள் கூட வந்திருக்காது.

விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு', கவின் நடித்த 'டாடா', தனுஷ் நடித்த 'வாத்தி', சசிகுமார் நடித்த 'அயோத்தி', ஜெயம் ரவி நடித்த 'அகிலன்', பிரபுதேவா நடித்த 'பகீரா', உதயநிதி நடித்த 'கண்ணை நம்பாதே, மாமன்னன்', சிம்பு நடித்த 'பத்து தல', சூரி, விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை பாகம் 1', கவுதம் கார்த்திக் நடித்த 'ஆகஸ்ட் 16, 1947, ராகவா லாரன்ஸ் நடித்த 'ருத்ரன்', அருள்நிதி நடித்த 'திருவின் குரல், கழுவேத்தி மூர்க்கன்', விமல் நடித்த 'தெய்வ மச்சான், குலசாமி', விஜய் ஆண்டனி நடித்த 'தமிழரசன், பிச்சைக்காரன் 2', விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி இணைந்து நடித்த 'பொன்னியின் செல்வன்', நாகை சைதன்யா, சரத்குமார், அரவிந்த்சாமி இணைந்து நடித்த 'கஸ்டடி', மணிகண்டன் நடித்த 'குட் நைட்', சாந்தனு நடித்த 'ராவண கோட்டம்', விஜய் சேதுபதி நடித்த 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', ஜெய் நடித்த 'தீராக் காதல்', ஆர்யா நடித்த 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்', ஆதி நடித்த 'வீரன்', சரத்குமார், அசோக் செல்வன் நடித்த 'போர் தொழில்', சித்தார்த் நடித்த 'டக்கர்', எஸ்ஜே சூர்யா நடித்த 'பொம்மை', விக்ரம் பிரபு நடித்த 'பாயும் ஒளி நீ எனக்கு', சுந்தர் சி நடித்த 'தலைநகரம் 2' ஆகிய 31 படங்கள் மட்டுமே கொஞ்சம் பிரபலமான, பிரபலமான, மிகப் பிரபலமான நடிகர்கள் நடித்த படங்களாக வெளிவந்தன.

யாருக்கு லாபம்
அப்படிப்பட்டவர்கள் நடித்த மேலே சொன்ன இந்த 31 படங்களில் கூட 'துணிவு, வாரிசு, டாடா, வாத்தி, அயோத்தி, பத்து தல, பொன்னியின் செல்வன், போர் தொழில்' என எட்டே எட்டு படங்கள் தான் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற படங்கள். வசூலில் இவை மிகப் பெரும் லாபத்தைக் கொடுத்தவை. கவனிக்கவும்… மிகப் பெரும் லாபத்தைக் கொடுத்தவை, எனக் குறிப்பிடும்படியான படங்கள் என்று எந்தப் படத்தையும் சொல்ல முடியாது. ஒரு சில படங்கள் மட்டுமே சில பல கோடிகள் என சுமாரான, குறிப்பிடும்படியான லாபத்தைக் கொடுத்த படங்கள் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

100 கோடி வசூல், 200 கோடி வசூல், 300 கோடி வசூல் என சில படங்களுக்கு சமூக வலைத்தளங்களில் மட்டும் பில்ட்அப்பைக் கொடுக்க வைத்துள்ளார்கள். ஆனால், உண்மை நிலவரம் வேறு என்பதுதான் உண்மை. 100 கோடி வசூல் என 'வாத்தி' படத்தையும், 200 கோடி வசூல் என 'துணிவு' படத்தையும், 300 கோடி வசூல் என 'வாரிசு, பொன்னியின் செல்வன் 2' ஆகிய படங்களையும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வசூல் கணக்கு பரவியது. இதில் எது உண்மை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும்.

‛குட்' சொல்ல வைத்த குட்டி பட்ஜெட் படங்கள்
இந்தப் பட்டியலில் எதிர்பாராத வெற்றி, வசூல் எனக் குறிப்பிடும்படியான படங்களாக “டாடா, அயோத்தி, விடுதலை பாகம் 1, குட்நைட், போர் தொழில்” ஆகிய படங்கள் இருக்கின்றன. இந்தப் படங்கள்தான் கடந்த ஆறு மாதத்தில் நம்பிக்கைக்குரிய படங்களாக அமைந்து எதிர்பாராத வரவேற்பையும், வசூலையும் கொடுத்துள்ளன. இந்த ஐந்து படங்களுமே முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் அல்ல என்பதும், அவை கதைகளுக்காகவும், மாறுபட்ட திரைக்கதைக்காகவும் வரவேற்பைப் பெற்றன என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

ஐஸ்வர்யா ராஜேஷ் டாப்

'வுமன் சென்ட்ரிக்' என்று சொல்லப்படும் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படங்களாக, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'த கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, பர்ஹானா'' என மூன்று படங்கள் வந்தன. வேறு எந்த ஒரு நடிகை முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த இத்தனை படங்கள் கடந்த ஆறு மாத காலத்தில் வெளியாகவில்லை. இந்தப் படங்கள் தனக்கு பெரும் வரவேற்பைக் கொடுக்கும் என்று எதிர்பார்த்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பார். ஆனால், மூன்று படங்களுமே அவருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த படங்களாகவே அமைந்தன. இந்தப் படங்களுடனும் 'ரன் பேபி ரன், தீராக் காதல்' ஆகிய படங்களுடனும் கடந்த ஆறு மாத காலங்களில் அதிக தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை என்ற பெருமையைப் பெறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவருக்கு அடுத்து அதிகப் படங்களில் நடித்த நடிகையாக வரலட்சுமி சரத்குமார், “வி 3, கன்னித் தீவு, கொன்றால் பாவம், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்” ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

யோகி பாபு டாப்
யோகிபாபு கதாநாயகனாக அல்லது முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ''பொம்மை நாயகி, யானை முகத்தான், காசேதான் கடவுளடா” ஆகிய படங்களும், நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்த “வாரிசு, த கிரேட் இந்தியன் கிச்சன், இரும்பன், கோஸ்டி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கருங்காப்பியம், டக்கர்,” ஆகிய படங்களும் வெளிவந்தன. கடந்த ஆறு மாதங்களில் அதிகப் படங்களில் நடித்தவர் என்ற பெருமை யோகி பாபுவைச் சேரும்.

நகைச்சுவை நடிகராக இருந்து 'விடுதலை' படம் மூலம் கதாநாயகனாக உயர்ந்த சூரி, ரசிகர்கள், விமர்சகர்கள் பாராட்டைப் பெற்றார். அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். கடந்த சில வருடங்களாக மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்த விஜய் சேதுபதி இந்த வருடத்தில் தனி கதாநாயகனாக வெற்றியைப் பெறவில்லை என்பது ஆச்சரியம். அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ஒரே ஒரு படமான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' யாரும் கவனிக்கப்படாமலேயே வந்து போனது.

சுவடே தெரியாமல் போன படங்கள்

இப்படி சில படங்கள் வந்ததா என ஆச்சரியப்பட வைத்த படங்கள் என சில படங்கள் இருக்கின்றன. அவற்றில் சில முன்னணி நடிகர்கள், நடிகைகள் கூட நடித்தும் வந்த சுவடே தெரியாமல் போயிருக்கின்றன. பாபி சிம்ஹா நடித்த 'வல்லவனுக்கு வல்லவன், வசந்த முல்லை', சிவா நடித்த 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும், காசேதான் கடவுளடா', அட்டகத்தி தினேஷ் நடித்த 'பல்லு படாம பாத்துக்க', காஜல் அகர்வால் நடித்த 'கோஸ்டி, கருங்காப்பியம்', ஆகிய படங்களைச் சொல்ல வேண்டும்.

மாறுபட்ட கதை களங்கள்
''பொம்மை நாயகி, தலைக்கூத்தல், ராஜா மகள், யாத்திசை, பர்ஹானா, எறும்பு, தண்டட்டி” ஆகிய படங்கள் வழக்கமான கமர்ஷியல் சினிமாவிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட கதையம்சத்துடன் வந்த படங்களாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அந்தப் படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமலும், வசூல் ரீதியாகவும் பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. வெளியீட்டிற்கு முன்பாக அப்படங்களைக் கொஞ்சம் சரி செய்திருந்தால், வெளியிட்டிற்குப் பின்பு சிறப்பான படங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

எந்த இயக்குனருக்கு ஹிட், தோல்வி
முன்னணி இயக்குனர்களில் 'துணிவு' படத்தை இயக்கிய வினோத், 'விடுதலை பாகம் 1' படத்தை இயக்கிய வெற்றிமாறன், 'பொன்னியின் செல்வன் 2' படத்தை இயக்கிய மணிரத்னம் அவர்கள் பெயரைக் காப்பாற்றிக் கொண்டார்கள். தோல்வியைத் தந்த முன்னணி இயக்குனர்களில் 'கஸ்டடி' படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தை இயக்கிய முத்தையா, 'பொம்மை' படத்தை இயக்கிய ராதாமோகன் சேர்ந்து கொண்டார்கள்.

கமல், சூர்யாவிற்கு வாய்ப்பில்லை
முன்னணி கதாநாயகர்களில் விஜய், அஜித், விக்ரம், சிலம்பரசன், தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோரது படங்கள் இந்த ஆண்டின் கடந்து போன மாதங்களில் வந்துவிட்டன. ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படம் ஆகஸ்ட்டிலும், சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' அடுத்த மாதத்திலும் வர உள்ளது. கமல்ஹாசன், சூர்யா ஆகியோரது படங்கள் இந்த வருடத்தில் வர வாய்ப்பில்லை.

துள்ள வைத்த ‛ரஞ்சிதமே…' வருடி சென்ற ‛காட்டு மல்லி'
இதுவரையில் வந்த படங்களின் பாடல்களில் எந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்று பார்த்தால் 'வாரிசு' படத்தில் இடம் பெற்ற 'ரஞ்சிதமே' பாடலைச் சொல்லலாம். யு டியுப் பார்வைகளின் படி அதன் லிரிக் வீடியோ பாடல் 213 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஏஆர் ரகுமானின் 'பொன்னியின் செல்வன் 2' பாடல்கள் ஏமாற்றத்தையே தந்தது. இளையராஜா இசையில் வெளிவந்த 'விடுதலை' படத்தின் பாடல்கள் அவரது ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. யு டியுபில் 'வழி நெடுக காட்டு மல்லி' பாடலுக்கு 73 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளது.

குறைந்த ஓடிடி ரிலீஸ்
ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகும் படங்கள் இந்த ஆண்டி அதிரடியாகக் குறைந்து போனது. கடந்த மூன்று வருடங்களாக அப்படி வருடத்திற்கு 25 படங்களுக்கு அதிகமாக வந்தது இந்த ஆண்டில் 5 படங்களுக்கும் கீழாகக் குறைந்து போனது அதிர்ச்சிகரமான ஒன்று.

வெளியான 100 படங்களில் 60க்கும் மேற்பட்ட படங்கள் ஒரு சில நாட்கள் மட்டும் ஓடியதா, ஒரு சில காட்சிகள் மட்டுமே ஓடியதா என தேடிப் பார்க்கக் கூட முடியாதபடி வந்து மறைந்தன. சில படங்களுக்கு டீசர், டிரைலர்கள் கூட வெளியாகவில்லை. அப்படியான பல படங்கள் முதல் காட்சிக்கு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த காட்சிகளுக்கும் ரசிகர்கள் வராமல் உடனடியாக தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டன. இப்படியான படங்களை யாருக்காக எடுக்கிறார்கள், எதற்காக எடுக்கிறார்கள் என்பது மிகப் பெரும் கேள்விக்குறி. அடுத்த ஆறு மாதங்களாவது ஆறுதல் தரும் மாதங்களாக இருக்குமா என்ற எதிர்பார்ப்புடன் திரையுலகினரும், ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.