லண்டன் : இரண்டாம் உலகப் போரின்போது போரிட்ட 101 வயது சீக்கிய முன்னாள் ராணுவ வீரர் ராஜிந்தர் சிங் தத்துக்கு உயரிய விருது வழங்கி பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் கவுரவித்தார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள இந்தியா சர்வதேச அமைப்பின் சார்பில் இந்தியா – பிரிட்டன் இடையேயான உறவை குறிப்பதற்காக இந்தியா – பிரிட்டன் வாரம் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் இந்தியாவை பூர்வீகமாக உடைய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பங்கேற்றார்.
இதில் இரண்டாவது உலகப் போரில் பிரிட்டன் தலைமையிலான கூட்டுப் படை சார்பில் போரிட்ட, 101 வயது ராஜிந்தர் சிங் தத்துக்கு ‘பாயின்ட்ஸ் ஆப் லைட்’ என்ற விருதை வழங்கி கவுரவித்தார்.இந்த விருது தங்கள் சமூகத்துக்கும் நாட்டுக்கும் சிறப்பான சேவை புரிந்தவர்களை மற்றவர்களுக்கு ஒரு உந்துசக்தியாக திகழ்ந்தவர்களை கவுரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த இந்தியாவில் 1921ல் பிறந்த தத், பிரிட்டிஷ் ஆட்சியின்போது ராணுவத்தில் பணியாற்றினார். பிரிட்டன் ராணுவம் தலைமையிலான கூட்டுப் படை சார்பில் இரண்டாவது உலகப் போரில் பங்கேற்றவர். கடந்த 1963ல் இருந்து லண்டனில் வசித்து வருகிறார்.
இரண்டாம் உலகப் போரில் பங்கேற்று தற்போது உயிருடன் உள்ளவர்களில் வெகுசிலரில் ஒருவரான தத், ஒருங்கிணைந்த இந்தியாவுக்கான முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தையும் நடத்தி வருகிறார். பிரிட்டிஷ் படையில் பங்கேற்ற முன்னாள் வீரர்களுக்கு இந்த சங்கத்தின் வாயிலாக உதவி வருகிறார். வருடைய சேவைகளை கவுரவிக்கும் வகையில் பிரிட்டனின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement