சென்னை: Chandramukhi 2 (சந்திரமுகி 2) சந்திரமுகி 2 படம் விநாயகர் சதுர்த்தி அன்று பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு நடிப்பில் பி.வாசு இயக்கிய படம் சந்திரமுகி. கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் 800 நாள்களுக்கு மேல் ஓடி பெரும் சாதனை படைத்தது. சாதாரண பேய் பட லைனாக இருந்தாலும் பி.வாசுவின் மேக்கிங் படத்தில் அதகளமாக இருந்தது. இதனால் அப்போதைய கிட்ஸுக்கு சந்திரமுகி எப்போதுமே ஃபேவரைட்.
மெகா ஹிட் சந்திரமுகி: ரஜினிகாந்த் கதை, திரைக்கதையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாபா ரஜினியின் கரியரில் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. இதனால் ரஜினிக்கு பெரும் நெருக்கடியும் உருவானது. இப்படிப்பட்ட சூழலில் பி.வாசு சந்திரமுகி கதையுடன் ரஜினியிடம் சென்றார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இருந்தாலும் அதில் ரஜினி நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டாகி ரஜினிக்கு சினிமாவில் மறுவாழ்வு கொடுத்தது.
சந்திரமுகி ஜோதிகா: படத்தின் வெற்றிக்கு பாடல்கள், வடிவேலுவின் காமெடி எல்லாம் உதவின. இருப்பினும் படத்தில் குறிப்பிடப்பட வேண்டியது ஜோதிகாவின் நடிப்பை. கங்கா என்ற கதாபாத்திரத்தில் சாந்தமாக இருக்கும் ஜோதிகா சந்திரமுகி கதாபாத்திரத்தில் விஸ்வரூபம் எடுத்தார். சந்திரமுகியாக அவர் காட்டிய முக பாவனைகள், வசன உச்சரிப்புகள் என அனைத்தும் ஜோதிகா எனும் மிகச்சிறந்த நடிகையை நீண்ட நாள்கள் கழித்து ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது.
சந்திரமுகி 2: இந்தச் சூழலில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இதில் லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்தது. இப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் ஜோதிகா நடித்திருந்த நடிப்புக்கு ஈடாக கங்கனா இரண்டாம் பாகத்தில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.ஆனால் அவரது நடிப்பை என்னால் ஈடுகட்ட முடியாது கங்கனா ஓபனாக ஒத்துக்கொண்டார்.
ஷூட்டிங் ஓவர்: படத்தின் ஷூட்டிங் 90 சதவீதம் முடிவடைந்திருக்கும் பாக்கி இருக்கும் காட்சிகளை விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டு தீவிரமாக பணியாற்றியது. இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்துவிட்டது என்று படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்தது.
எப்போது ரிலீஸ்: இந்நிலையில் ஏற்கனவே வெளியான தகவலின்படி படமானது விநாயகர் சதுர்த்தி அன்று படம் வெளியாகவிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்திருக்கிறது. சந்திரமுகி 2 படம் தமிழ் மட்டுமின்றி மலையாளம்,, தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.