மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில் வெப்ப அலை காரணமாக, நடப்பு ஆண்டில் இதுவரை, 112 பேர் உயிரிழந்துள்ளனர்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில், முன்னெப்போதும் இல்லாத வகையில், நாடு முழுதும் வெயில் சுட்டெரித்து வருகிறது. தலைநகர் மெக்சிகோ சிட்டி உட்பட பல பகுதிகளில், 45 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.
இதனால், பல நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
கொளுத்தும் வெயிலால், வீடுகளுக்குள்ளேயே பொது மக்கள் முடங்கி உள்ளனர். இந்நிலையில், அதீத வெப்ப அலையால், மெக்சிகோவில் நடப்பு ஆண்டில் இதுவரை, 112 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில், ஜூன் மாதத்தில் மட்டும், 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து, மெக்சிகோ சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
கடந்த சில வாரங்களாக, நாடு முழுதும் பல்வேறு நகரங்களில், 40 டிகிரி செல்ஷியல் வெப்பம் பதிவாகியது.
ஜூன் 11 – 17 வரை, வெப்ப அலையால், நாடு முழுதும் 31 பேர் பலியாகிய நிலையில், ஜூன் 18 – 24 வரையிலான ஒரு வாரத்தில் மட்டும், 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொத்தம், 112 பேர் வெப்ப அலையால் பலியாகி உள்ளனர். இதில் அதிக உயிரிழப்புகள், வடக்கு எல்லை மாகாணமான நியூவோ லியோனில் பதிவாகி உள்ளன. 2022 உடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் உயிரிழப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement