சென்னை: விஜய் டிவியில் இருந்து சினிமாவில் கலக்கும் இளம் ஹீரோக்களில் கவின் முக்கியமானவர்.
சீரியல், பிக் பாஸ் என மாஸ் காட்டிய கவின், லிஃப்ட், டாடா படங்கள் மூலம் முன்னணி ஹீரோக்களின் ரேஸில் இணைந்துள்ளார்.
இதனால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அவருடன் நடிக்க இளம் நாயகிகள் போட்டிப் போட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் கவினின் புதிய படத்தில் நடிக்க இரண்டு நாயகிகள் இடையே கடும் போட்டி காணப்படுகிறதாம்.
கவினுக்கு ஜோடியாக துடிக்கும் இளம் நாயகிகள்: சிவகார்த்திகேயன் ரூட்டில் விஜய் டிவியில் இருந்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் கவின். சீரியல், ரியாலிட்டி ஷோ, பிக் பாஸ் என ரவுண்டு வந்துகொண்டிருந்த கவின், சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல், இயக்குநர் நெல்சனின் உதவியாளராகவும் பயணித்து வந்தார்.
இதனிடையே பிக் பாஸ் மூலம் கவனம் ஈர்த்த கவினுக்கு, லிஃப்ட், டாடா திரைப்படங்கள் நல்ல ரீச் கொடுத்தன. முக்கியமாக டாடா படத்தின் வெற்றியால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கிறதாம். சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் படத்தில் கமிட்டானார் கவின். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து இளன் இயக்கும் படத்தில் கவின் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ஹிட் அடித்த பியார் பிரேமா காதல் படம் மூலம் பிரபலமானவர் இளன். பியார் பிரேமா காதல் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ஸ்டார் என்ற படத்தைத் தொடங்கினார். ஆனால், இந்தப் படம் பாதியிலேயே ட்ராப் ஆனதோடு, இதில் தனுஷ் நடிக்கலாம் எனவும் சொல்லப்பட்டது.
ஏற்கனவே ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் ரீச் ஆகியிருந்ததால், தனுஷ் கண்டிப்பாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனுஷின் கால்ஷீட் பிஸியாக இருப்பதால் அவரால் நடிக்க முடியவில்லை என தெரிகிறது. தற்போது அவருக்குப் பதிலாக கவின் ஸ்டார் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இளன் – கவின் இணையும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இரண்டு நாயகிகளிடம் கடும் போட்டி காணப்படுகிறதாம். அதில் ஒருவர் லவ் டுடே இவானா என்றும், இன்னொருவர் பேச்சுலர் நாயகி திவ்யா பாரதி எனவும் சொல்லப்படுகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் வெளியான லவ் டுடே படத்தில் நடித்திருந்த இவானா, கோலிவுட் ரசிகர்களின் கனவுக் கன்னியாக மாறிவிட்டார்.
அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்துள்ள படத்திலும் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்துள்ளார். அப்படியே கோலிவுட்டில் தனது மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் இவானா, கவினுடன் ஜோடி சேர தூண்டில் போட்டு வருகிறாராம். அதேபோல் பேச்சுலர் படத்தில் தாறுமாறாக கலக்கிய திவ்யா பாரதியும் தனது அடுத்த ரவுண்டை கவினுடன் தொடங்க பிளான் செய்து வருகிறாராம்.
கவினுடன் ஜோடி சேர இளம் நாயகிகள் இடையே நடக்கும் இந்தப் போட்டியில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பது விரைவில் தெரியவரும். டாடா மூலம் திரும்பி பார்க்க வைத்துள்ள கவினுக்கு இனிவரும் படங்களும் சூப்பர் ஹிட்டாக அமையுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.