சென்னை: Maamannan Box Office (மாமன்னன் பாக்ஸ் ஆஃபிஸ்) மாமன்னன் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.
மாரி செல்வராஜ் உதயநிதி, வடிவேலு,கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில், லால் உள்ளிட்டோரை வைத்து இயக்கியிருக்கும் படம் மாமன்னன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு இது கடைசி படம் என்பதாலும், பரியேறும் பெருமாள் இயக்குநரின் படம் என்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு படத்துக்கு இருந்தது.
எதிர்பார்ப்பு பூர்த்தியானதா?: படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையாக பல சிக்கல்களை கடந்து படம் நேற்று திரையரங்கத்தில் வெளியானது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் சென்று படத்தை பார்த்து ரசித்தனர். படம் பார்த்த பெரும்பாலானவர்கள் மாமன்னனுக்கு தங்களது ஆதரவையும், வரவேற்பையும் கொடுத்துவருகின்றனர்.
அதிர்ந்த திரையரங்கம்: ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து அதிகாரத்திற்கு வந்தாலும் சாதி திமிர் பிடித்தவர்கள் எப்போதும் அடிமைகளாகவே நடத்துவார்கள் என்பதையும் அதை இளம் தலைமுறையை சேர்ந்த ஒருவர் அடித்து உடைப்பதும் என்ற ஒன்லைனை மாரி செல்வராஜ் தனது பாணியில் மிரட்டலாகவே படமாக்கியிருக்கிறார். குறிப்பாக இடைவேளை காட்சியில் ஒட்டுமொத்த திரையரங்குமே அதிர்ந்தது.
வடிவேலு,ஃபஹத்: அதேபோல் படத்துக்கு மிகப்பெரும் பலமாக வடிவேலுவும், ஃபகத் பாசிலும் இருந்தனர். ஒரு பக்கம் எமோஷனலாக வடிவேலு ஸ்கோர் செய்ய மறுபக்கம் பார்வையிலேயே வில்லத்தனத்தையும், அதிகார திமிரையும் காட்டி ஃபகத் பாசில் மிரட்டியிருக்கிறார். இந்தப் படம் நிச்சயம் வடிவேலுவுக்கும், ஃபகத்துக்கும் கரியர் பெஸ்ட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வசூல் எவ்வளவு?: மாமன்னன் படத்துக்கு நேற்று எதிர்பார்த்ததைவிடவும் நல்ல ஓபனிங் இருந்தது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு இதற்கு முன்பு இப்படி ஒரு ஓபனிங் வந்ததில்லை. இந்தச் சூழலில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மாமன்னன் படம் முதல் நாளில் 7 கோடி ரூபாய்வரை தமிழ்நாட்டில் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதாலும், படமும் நல்ல விமர்சனத்தை பெற்றுவருவதாலும் போகப்போக வசூல் அதிகமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாரி செல்வராஜ் பேட்டி: முன்னதாக சென்னையில் படத்தை பார்த்த பிறகு பேசிய மாரி செல்வராஜ், “மாமன்னன் படம் முற்றிலும் வேறு செய்தியை பேசுகிறது. நிச்சயம் மக்கள் இந்தப் படத்தை விவாதிப்பார்கள். மாமன்னன் படம் எதை உணர்த்துகிறது, எதுவாக உள்வாங்கப்படுகிறது. இதை எல்லாம் மக்கள்தான் கூற வேண்டும். மக்கள்தான் படம் குறித்து பேச வேண்டும்.
அனைவருக்கும் நன்றி: இந்தக் கதையை எடுக்க முடியாதோ என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனால், இது படமாக வெளிவந்ததற்கு உதயநிதிதான் காரணம். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். மேலும், இசையால் இந்தப் படத்தை தாங்கிப் பிடித்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சாருக்கும் நன்றி” என தெரிவித்திருந்தார்.