பாலக்காடு:கேரளாவில், 2000 ரூபாய் நோட்டை மாற்றி தருவதாக கூறி, பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த, தமிழக முன்னாள் எஸ்.ஐ.,யை, கேரள போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலத்தில், பல்வேறு வழக்கில் முக்கிய குற்றவாளியான, பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த அஜித்தை பிடிக்க, மாவட்ட எஸ்.பி., ஆனந்த் அறிவுரை படி, பாலக்காடு புதுச்சேரி போலீசார், தமிழகத்தில், கோவையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அஜித்துடன் சேர்ந்து பணம் பறிக்க திட்டம் தீட்டிய, தமிழகத்தின், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சரவணவேலன், 42, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து, கேரள புதுச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜிவ் கூறியதாவது:
கைது செய்யப்பட்டுள்ள சரவணவேலன், 2011ல் தமிழக காவல் துறையில், தொழில்நுட்ப பிரிவில் தலைமை காவலராக பணியாற்றினார். எஸ்.ஐ., பதவி உயர்வு பெற்ற அவர், அடுத்த ஆண்டு, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின், சரவணவேலன் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இவர், எஸ்.ஐ., என அறிமுகப்படுத்தியும், அடையாள அட்டையை பயன்படுத்தியும், பல்வேறு மோசடியில் ஈடுபட்டு வருகிறார். இவர் பயன்படுத்திய கார் நம்பர் பிளேட்டில், போலீஸ் என எழுதி வைத்திருந்தார்.
திருப்பூர், கோவையை மையமாக கொண்டு, இந்த கும்பல் மோசடி செய்து வருவது விசாரணையில் தெரிய வந்தது.
கமிஷன் அடிப்படையில், 2000 ரூபாய் நோட்டை, 500 ரூபாய் நோட்டாக மாற்றி தருவதாக கூறி, பலரிடம் பணத்தை வாங்கி இந்த முன்னாள் எஸ்.ஐ., மோசடி செய்தது விசாரணையில் தெரிந்துள்ளது.
பல நாட்களாக கண்காணித்து, இவரை கைது செய்துள்ளோம். இக்கும்பலில் மேலும் பலர் உள்ளனர். அவர்களை கைது செய்ய தொடர் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்