ஆன்மிகக் கேள்விகள் – அர்த்தமுள்ள பதில்கள்: பிரச்னைகள் தீர்க்கும் பிரதோஷ பூஜையின் மகத்துவங்கள்!

இன்று சனிப்பிரதோஷம்… பிரதோஷங்களில் இதை மகாபிரதோஷம் என்கிறோம். ஒரு சனிப்பிரதோஷத்தில் சிவ வழிபாடு செய்தால் ஆண்டின் அனைத்துப் பிரதோஷங்களிலும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் அப்படிப்பட்ட நம் தோஷங்களை எல்லாம் போக்கக்கூடிய அற்புதமான நாள் இன்று. இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடு, மேற்கொள்ளும் விரதங்கள் ஆகியன பல மடங்கு பலன் தரும். இந்த வேளையில் பிரதோஷ வழிபாடு குறித்த பல கேள்விகளுக்கு விடையளிக்கிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.

காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

பிரதோஷ வேளை என்றால் என்ன நேரம்? பிரதோஷ வழிபாட்டின் மகத்துவம் என்ன?

ஒவ்வொரு நாளும் மாலையில் 6 முதல் 7:30 மணி வரையிலான காலம் பிரதோஷ காலம் ஆகும். இதையே நித்திய பிரதோஷம் என்று கூறுவார்கள். அனைத்துவிதமான தோஷங்களைப் போக்கக்கூடியதாகவும், சகல நன்மை களை அருளக்கூடியதாகவும், பூரண மகிழ்ச்சியைத் தரக்கூடியதாகவும் திகழ்கிறது பிரதோஷ காலம்.

உலகிலுள்ள எல்லா உயிர்களும் ‘பசுக்கள்’ என்று ஆகமங்கள் குறிப்பிடுகின்றன. அவை அனைத்தும் எல்லாம்வல்ல பரம்பொருளான பதியை – சிவபெருமானை அடையவேண்டும். அதுவே ஜீவாத்மாக்களுக்கான பிறப்பின் நோக்கமாகும்.

‘ப்ரதோஷ யஜனம் வக்ஷ்யே ச்ருணு

த்வம் தத் ப்ரபஞ்சன

ஆயுர் ஆரோக்ய ஐஸ்வர்ய ஸர்வ யக்ஞ பலப்ரதம்

ஸர்வ பாப ஹரம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்’

– என்கின்றன ஞானநூல்கள்.

அதாவது, பிரதோஷ காலத்தில் எவரொருவர் பூஜை செய்கிறாரோ, அவருக்கு நல்ல ஆரோக்கியமும் அனைத்துவிதமான ஐஸ்வர்யங்களும், சகல யாகங்களைச் செய்த பலன்களும் கிடைக்கும். அவருடைய பாவங்கள் போக்கப்படும்; அவருக்குப் பாதிப்பைத் தரும் தீமைகள் அழிக்கப்படும் என்று சிவபெருமானே அருளியுள்ளார்.

இவ்வுலகில் நாம் வாழ்வது, நம் கர்ம வினைகளைப் போக்கிக் கொள்ளவே என்பதை அறிந்து, பரம்பொருளான சிவ பெருமானை நோக்கிப் பயணிக்க வேண்டும். அப்படியான பயணத்துக்கு பிரதோஷ வழிபாடு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.

வீட்டில் பிரதோஷ வழிபாடு செய்யலாமா, எப்படிச் செய்ய வேண்டும்?

அற்புதமான பிரதோஷ வேளையில் சிவபெருமானை வழிபடுவோருக்கு சகலவிதமான ஆபத்துகளும் நீங்கும்; சிவபெருமானுடனேயே இருக்கக்கூடிய உயர்ந்த நிலையை அளிக்க வல்லது பிரதோஷ காலம். எனவே பிரதோஷ வேளையில் ஆலயத்துக்குச் சென்று சிவ தரிசனம் செய்வதைச் சிறப்பாகச் சொல்லி வைத்தார்கள். ஆலய வழிபாட்டுக்குதான் முதன்மை.

ஆலயம் செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே சுவாமியை வணங்கலாம். பிரதோஷ வேளையில் தூய வில்வ இலைகளாலும் மலர்களாலும் அர்ச்சனை செய்து, பதிகங்கள் மற்றும் துதிகளைப் பாடி சிவபெருமானை திருப்தி செய்வதினால் நமக்கு இகபர சௌபாக்கியங்கள் கிடைக்கும் என்கின்றன ஆகமங்கள்.

பிரதோஷ வகைகள் என்னென்ன?

பிரதோஷ காலமானது மூன்று வகையாகப் போற்றப்படுகின்றன. அனுதினமும் மாலை சூரிய அஸ்தமன வேளையிலிருந்து ஒன்றரை மணி நேரம் நித்திய பிரதோஷம் ஆகும்.

15 நாள்களுக்கு ஒருமுறை, மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்னும் பின்னுமாக உள்ள மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) திரயோதசி திதி இருக்கும்போது வருவது நைமித்திக பிரதோஷம் ஆகும். சனிக்கிழமை அன்று மாலை பிரதோஷ காலத்தில் திரயோதசி திதி சம்பவிக்கும்போது, அது மஹா பிரதோஷம் எனச் சிறப்பிக்கப்படும்.

நந்தி

பிரதோஷ காலத்தில் நந்திக்கு முக்கியத்துவம் ஏன்?

பிரதோஷ காலத்தில் நந்திதேவருக்குச் சிறப்புப் பூஜைகள் ஏன் என்பது குறித்து ஆகமங்கள் விளக்குகின்றன.

`ஸாயம் ஸம்ஹார காலத்வாத் ஸர்வ தோஷாநுத்தயே

விச்வரக்‌ஷாகரம் தர்மம் வ்ருஷபம் ப்ரதமம் யஜேத்’

அதாவது, `சாயங்கால வேலையானது தோஷங்கள் நிறைந்தது என்பதால், குறிப்பிட்ட அந்த வேளையில் அனைத்து உலகங்களும் காக்கப்படும் பொருட்டு, தர்மத்தின் சொரூபமான ரிஷபத்தை முதலில் நாம் பூஜிக்கிறோம்’ என்று ஆகமங்கள் கூறுகின்றன.

நந்தியிடத்தில் எல்லா புண்ணிய நதிகளும் இருக்கின்றன. ஆகையால் பிரதோஷ காலத்தில் நந்தியின் கொம்புகளின் வழியாகவே சிவபெருமானை தரிசிக்க வேண்டும். இதனால் புண்ணிய நதிகளில் நீராடிய பலன் நமக்குக் கிடைக்கும். அவ்வாறு புனிதமடைந்த இந்த ஆத்மாவானது பரமசிவனை தரிசிப்பதால், சிவ தரிசனப் புண்ணியம் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும் என்று ஆகமங்கள் வழிகாட்டுகின்றன.

பிரதோஷ தினத்தில் நந்திக்குக் காப்பரிசி படைப்பது ஏன்?

ஒவ்வோர் இறை சக்திக்கும் எவ்விதமான நிவேதனம் படைக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றன ஆகமங்கள். அவற்றில் கூறியுள்ளபடியே உரிய நிவேதனத்தை அளித்து, உரிய பலன்களைப் பெறவேண்டும் என்பது நியமம்.

‘தண்டுலம் முத்க பின்னம் ச குளம் ச நாரிகேளகம்

அகிலம் மிச்ரயித்வா து நந்தினே விநிவேதயேத்’

இந்த வகையில், பிரதோஷ காலத்தில் நந்தியெம்பெருமானுக்குக் காப்பரிசியை நிவேதனமாகப் படைத்துச் சிறப்பான பலன்களைப் பெறவேண்டும்.

பிரதோஷம்

பிரதோஷ வழிபாடு மேற்கொள்ள வேண்டிய நேரம் என்ன?

மாலை 4:30 முதல் 6 மணி வரை பிரதோஷ வழிபாட்டு நேரம் என்பார்கள். மாலை சூரியன் அஸ்தமனமானதிலிருந்து மூணே முக்கால் நாழிகை காலம் பிரதோஷ வேளை ஆகும். சில ஆலயங்களில் 4:30 முதல் 6 மணி வரையிலும்; சில ஆலயங்களில் 6 முதல் 7:30 மணி வரையிலுமாக வழிபாடுகள் நடைபெறுகின்றன. அவரவர் மரபுப்படி ஆங்காங்கே ஆலயங்களில் வழிபாடுகள் செய்கிறார்கள்.

மொத்தத்தில் மாலை 4:30 மணி முதல் 7:30 மணிக்குள் இந்தப் பிரதோஷ பூஜைகளைச் செய்து முடித்தல் சிறப்பானது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.