புதுடெல்லி: டெல்லியில் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கான அதிகாரத்தை துணை நிலை ஆளுநரிடம் வழங்கும் வகையில் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த மே 19-ம் தேதி பிறப்பித்தது. இது உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறிய செயல் என டெல்லி ஆம் ஆத்மி அரசு கூறியது.
மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் ஆதரவை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் திரட்டினார். ஆனால், காங்கிரஸ் கட்சி ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு நேற்று மனுத்தாக்கல் செய்தது. அதில், அரசியல் சாசனத்தின் 238ஏஏ பிரிவு திருத்தப்படாததால், அவசர சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரங்களை பறித்து, தேர்ந்தெடுக்கப்படாத துணை நிலை ஆளுநர் கையில் கொடுக்கப்பட்டுள்ளது’’ என கூறியுள்ளது.
மேலும் அவசர சட்டத்தின் நகல் டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை மறுதினம் எரிக்கப்படும் என ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் சவுரவ் பரத்வாஜ் கூறியுள்ளார். டெல்லியில் 70 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அவசர சட்டத்தின் நகல்களை எரிக்க ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.