சென்னை: தைரியம்தான் காவல் துறையின் அடித்தளம். கடினமான சூழ்நிலைகளில் உறுதியான மன நிலையில் இருந்தால் களத்தில் நிற்க முடியும் என போலீஸாருக்கு பணி ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார்.
பணி ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாவுக்கு பிரிவு உபசாரவிழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், டிஜிபி சங்கர் ஜிவால், சைலேந்திரபாபுவுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.
பின்னர், போலீஸார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் சைலேந்திரபாபு ஏற்புரை நிகழ்த்தியதாவது: மன நிறைவுடன் ஓய்வு பெறுகிறேன். 2 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவி ஏற்றபோது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்க முக்கியத்துவம் தரப்படும் உள்ளிட்ட 4 அறிவிப்புகளை வெளியிட்டேன். அதை நிறைவேற்ற என்னால் இயன்றவரை முயற்சி செய்தேன். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜாதிக் கலவரம், மத மோதல்கள், துப்பாக்கிச் சூடுஉட்பட எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.
சிக்கலான சவால்கள்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டது. இந்த அளவு அமைதி தமிழ்நாட்டில் எப்போதும் இல்லை என 36 ஆண்டுகள் இத்துறையில் பணியாற்றிய என்னால் அடித்துக் கூற முடியும். காவல் துறை பணி என்பது எளிதாக இருக்காது. இந்த பணியில் நீங்கள் பல சிக்கலான சவால்களைச் சந்திப்பீர்கள். இந்தசவால்கள் உங்களை வேதனைக்கும், சோதனைக்கும் உட்படுத்தும்.
அவற்றை நீங்கள் தைரியமாக எதிர்கொண்டு காவல் படையை முன்னின்று நடத்த வேண்டும். படையிலிருந்து பின் வாங்கினால் நல்ல தலைவனாகக் கருதப்பட மாட்டீர்கள்.
நல்ல தலைவர்கள்: தைரியம்தான் நமது காவல் துறையின் அடித்தளம். கடினமான சூழ்நிலைகள் சில காலம் நீடிக்கும். ஆனால், நீங்கள் உறுதியானமனநிலையில் இருந்தால் மட்டுமேகளத்தில் நிலைத்து நிற்பீர்கள்.தொடர்ந்து உங்களது ஆற்றல்களையும், திறமைகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போது, பதவிகள் உங்களைத் தேடி வரும். நீங்கள் பதவிகளைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது. காவல் துறையில் நல்ல தலைவர்கள், தலைமையை உருவாக்கி உள்ளேன்.
அவர்கள் அடுத்த கட்டத்துக்குக்காவல் துறையை எடுத்துச் செல்வார்கள். நான் எனது கடமையைச் செய்து முடித்துவிட்டேன். காவல் துறையை விட்டுச் செல்லும்போது நான் மகிழ்ச்சியாகத் திருப்தியாக சில நேரம் சோகமாக உணர்கிறேன். நன்றி உணர்வு மட்டும் மேலோங்குகிறது. எனது முன்னோடிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 93 வயது நிரம்பிய எனது தாய்க்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி என்றார்.
நிகழ்ச்சியில், உள்துறைச் செயலர் அமுதா, சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், டிஜிபிக்கள் ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால், அமரேஷ் புஜாரி, அபய் குமார் சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய வழியனுப்பு விழா: இதற்கிடையே, பணி ஓய்வுபெற்ற சைலேந்திரபாபுவை காரில் அமர வைத்து, டிஜிபி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் ரோப் கயிறு கட்டி இழுத்து பாரம்பரிய முறைப்படி வழியனுப்பி வைத்தனர்.