சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் தினேஷ் (26). ஆட்டோ டிரைவரான இவர், நேற்றிரவு கிண்டி வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது தினேஷை வழிமறித்த இரண்டு பேர், அவரை ஓட ஓட விரட்டி வெட்டினர். அவர்களிடமிருந்து தப்பிக்க தினேஷ், வண்டிக்காரன் தெருவுக்குள் ஓடினார். பின்னர் அந்த் தெருவுக்குள் உள்ள கடைக்குள் ஓடி தினேஷ் மறைந்து கொண்டார். ஆனாலும் அந்த இரண்டு பேர் கடைக்குள் நுழைந்தனர். கடையிலிருந்தவர்களை கத்திமுனையில் மிரட்டிய இருவரும், தினேஷை வெட்டிக் கொலைசெய்தனர். இந்தச் சமயத்தில் கடையிலிருந்தவர்கள் வெளியில் வந்து கடையின் ஷட்டரை வெளிபக்கமாகப் பூட்டினர். அதனால் தினேஷை கொலை செய்ய வந்தவர்கள் கடைக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து கிண்டி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கடையின் ஷட்டரைத் திறந்து உள்ளே சென்றனர். அப்போது கத்தியோடு காத்திருந்த இருவரையும் போலீஸார் துப்பாக்கிமுனையில் மடக்கிப் பிடித்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த தினேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீஸாரிடம் சிக்கியவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் மணிவண்ணன், உதய் என்பதும், அவர்கள் இருவரும் பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் பிரபல ரௌடி ராபின் என்பவனின் கூட்டாளிகள். தற்போது ராபின் சிறையிலிருக்கிறார். மேலும் டிரைவர் தினேஷ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட உதய், மணிவண்ணன் ஆகியோர் சில தினங்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளியில் வந்தார்கள். அதனால் டிரைவர் தினேஷ் கொலைக்கும் ராபினுக்கும் என்ன தொடர்பு என போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
இது குறித்து கிண்டி போலீஸார், “ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவன் பிரபல ரௌடி நாகூர்மீரான். இவன் கடந்த ஆண்டு கொலைசெய்யப்பட்டான். இந்த வழக்கில் ராபின் என்ற ரௌடி கைதுசெய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டான். இந்தச் சமயத்தில்தான் ராபினுக்கு எதிராக ஆட்டோ டிரைவர் தினேஷ், நாகூர்மீரானின் கூட்டாளிகளுடன் செயல்பட்டதாகத் தெரிகிறது. அதனால்தான் தினேஷ், கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அது தொடர்பாக விசாரித்து வருகிறோம்” என்றனர்.