காரைக்கால்: உலகப்புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இன்று புனிதவதி பரமதத்தர் திருமணமும் நாளைய தினம் மாங்கனி இறைத்து வழிபடும் வைபவமும் நடைபெறும்.
63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் அம்மையார் காரைக்கால் அம்மையார். நான்காம் நூற்றாண்டில் தோன்றி தமிழுக்கும், சைவ சமயத்துக்கும் பெரும் தொண்டாற்றியவர். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 11 பாடல்கள், திருவிரட்டை மணிமாலை 20 பாடல்கள், அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள் என இவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே தமிழ் இலக்கியத்தில் முக்கியமானவை.
மனிதகுலத்தில் பிறந்து, வளர்ந்து இறைநிலையை அடைந்த காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் புராண மரபுபடி ஆனி பவுர்ணமியில் மாங்கனி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கையை மாற்றியது இரண்டு மாம்பழங்கள்தான். எனவேதான் மாங்கனி திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் இரண்டு மாம்பழங்களை படைத்து வழிபட்டு ஒன்றை பிரசாதமாக பெற்றுச் செல்வது வழக்கம்.
காரைக்கால் நகரில் இந்த ஆண்டு மாங்கனி திருவிழா நேற்று தொடங்கியது. மாங்கனித் திருவிழாவையொட்டி காரைக்கால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாங்கனி திருவிழா நேற்றிரவு மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. ஆற்றங்கரை சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து மாப்பிள்ளை ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று காலை 11 மணிக்கு பரமதத்தருக்கும் ஸ்ரீபுனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடும், இரவு ஸ்ரீபுனிதவதியாரும், பரமதத்தரும் தம்பதிகளாக முத்துச்சிபிகையில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா நாளை நடைபெறுகிறது. பரமசிவன் அடியார் கோலத்துடன் பவளக்கால் விமானத்தில் அமர்ந்து வீதியுலா நடைபெற்றது. காலை 7 மணிக்கு பரமசிவன், காரைக்கால் அம்மையிடம் மாங்கனி வாங்கி உண்ட சிவனடியார் கோலத்தில் பவளக்கால் விமானத்தில் புறப்பட்டு திருவீதி உலா வருவார்.
அப்போது நகரெங்கும் கூடியிருக்கும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு, மாங்கனிகளை வாரி இறைத்து வழிபடுவார்கள். இந்த விழாவில் கலந்து கொண்டு மாங்கனி பெறுபவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனையடுத்து மாலையில், ஈசனுக்கு அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாங்கனி திருவிழாவில் பங்கேற்க பல்லாயிரக்கணக்கானோர் காரைக்கால் நகரில் குவிந்துள்ளனர். காவல்துறை சார்பில் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.