சென்னை:
ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் சம்பாதித்த பணம் குறித்து நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பியதால் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கோபம் அடைந்தார்.
அண்மைக்காலமாக சரத்குமாரின் பேச்சுகளும், நிருபர்களுடனான சந்திப்புகளும் பெரும் சர்ச்சையாக வெடித்து வருகின்றன. சமீபத்தில் கூட தென்காசியில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட சரத்குமாருக்கும், நிருபர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. “உங்களை யார் இங்கே வரச் சொன்னது..” என ஏகத்துக்கும் டென்ஷன் ஆகி கத்தினார் சரத்குமார்.
அதேபோல, இன்று நடந்த பிரஸ்மீட்டில், விஜய் அரசியலுக்கு வருவது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்வியால் திடீரென சரத்குமார் ஆவேசமானார்.”நீங்கள் எந்த நிறுவனம்? விஜய் அரசியலுக்கு வருவது குறித்து உங்கள் நிறுவனத்தின் கருத்து என்ன?” என கேள்வி கேட்ட நிருபரை சரமாரியாக விளாசி தள்ளினார் சரத்குமார்.
இந்நிலையில், ஒரு நிருபர், “ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்தவர்கள் பணம் திருப்பி தந்து கொண்டிருக்கிறார்களே. நீங்கள் அவ்வாறு பணம் கொடுப்பீர்களா?” என்று கேள்வியெழுப்பினார்.
இந்தக் கேள்வியை கேட்டதும் மேலும் கோபமடைந்த சரத்குமார், “யார் பணத்தை திருப்பிக் கொடுக்குறாங்க? என்னை திருப்பி தர யாராவது சொன்னார்களா? அப்படி எந்த செய்தியையும் கேள்விப்படவில்லை. அப்படி யாராவது என்னிடம் வந்து சொன்னால் என்ன செய்யணும்னு நான் முடிவு பண்ணுவேன்” எனக் கூறிவிட்டு, கேள்விகேட்ட நிருபரை முறைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றார் சரத்குமார்.