சாத்தூரில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வேங்கடாசலபதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனிப் பிரம்மோத்ஸவ விழா 11-நாள்கள் நடைபெறுகிறது.
திருவிழாவின் ஒவ்வொரு நாளும் பல்லக்கு சேவை, பெரிய கருடவாகனம், சிறிய கருடவாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி முக்கிய வீதிகளின் வழியாகவும், நான்குமாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் ஐந்தாம் நாள் (29.6.23) பெருமாளுக்கு கருடசேவை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக அலங்கரிக்கபட்ட பெரியகருட வாகனத்தில் எழுந்தருளிய0 பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகளும், பூஜைகளும் நடத்தபட்டன. பின்னர் வடக்கு மற்றும் தெற்கு ரத வீதிகள் வழியாக அலங்கரிக்கபட்ட வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 6-ம் நாள் விழாவான நேற்று (30.6.23) பல்லக்கில் எழுந்தருளிய பெருமாள், படந்தால் கிராமத்திற்குச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடைபெற்றது. 7-ம் நாள் விழாவான இன்று, படந்தால் கிராமத்திலிருந்து காலை மீண்டும் திருக்கோயில் வரும் பெருமாள், இரவில் சடையம்பட்டி கிராமத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
ஆனி பிரம்மோத்ஸவவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 3-ம் தேதி திங்கள்கிழமை நடைபெற உள்ளது. அன்று காலை 6.15மணிக்கு நேரில் எழுந்தருளும் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து காலை 9.15 மணிக்கு மேல் திருத்தேர் வடம்பிடித்து இழுத்து ரதவீதிகள் வழியாகத் தேர் வலம்வரும். திருவிழாவின் ஒவ்வொரு நாளிலும் சாத்தூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் கலந்து கொண்டு வழிபாடு செய்கின்றனர்.