சிங்கப்பூர்,
உலகின் சுத்தமான நகரங்களில் ஒன்றான சிங்கப்பூரில், கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக இல்லாத வகையில், தற்கொலை செய்து கொள்வோரின் விகிதம் சென்ற ஆண்டு 26 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தற்கொலை தடுப்பு அமைப்பான சமாரிட்டன்ஸ் ஆப் சிங்கப்பூர், 2021-ம் ஆண்டில் அங்கு 378 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2022-ல் அந்த எண்ணிக்கை 476 ஆக அதிகரித்து உள்ளதாகவும் தெரிவிக்கிறது. மேலும் கவலையளிக்கும் விதமாக, இந்த பட்டியலில் 10-29 மற்றும் 70-79 வயதுடையோர் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதன் தலைவர் கேஸ்பர் டேன் கூறுவது ,
“தற்கொலை என்பது மனநலம் தொடர்பான சவால்கள், சமூக அழுத்தங்கள், மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிக்கலான பிரச்சினை” என கூறியிருக்கிறார்.
மனநல ஆலோசகர் ஜாரெட் நெக் இது குறித்து கூறும்போது,
“இளைஞர்களும், வயதானவர்களும் மிகவும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது. சமூகத்தால் பின் தள்ளப்படுவதும், தனிமைப்படுத்தப்படுதலுமே இதற்கு முக்கிய காரணம். இதற்கு தீர்வு காண்பது மிக அவசியம்,” என்று தெரிவித்திருக்கிறார்.
உலக சுகாதார அமைப்பின்படி, 7 லட்சம் பேருக்கு மேல் ஒவ்வொரு வருடமும் உலகில் தற்கொலை செய்து கொள்வதாகவும், 15-29 வயதுப்பிரிவில் இறப்போரில் அதிகமானோர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.