லக்னோ: சிறைகள் தண்டனை கூடங்களாக இருப்பதை விட சீர்திருத்தும் இல்லங்களாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலத்திற்கான புதிய சிறைச்சாலைச் சட்டத்தைத் தயாரிப்பது தொடர்பான வழிமுறைகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த 15ம் தேதி வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இது குறித்து பேசிய அவர், “சிறைச்சாலைகளை ‘சீர்திருத்த இல்லங்களாக’ அமைக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். சிறைச்சாலையில் உள்ள குறைகளை மதிப்பீடு செய்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும். இதற்காக சிறைத்துறை வாரியம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பெண் கைதிகள் மற்றும் திருநங்கைகளுக்கு தனித்தனியாக தங்குமிடம் வழங்கப்பட வேண்டும். அந்த வகையில், மாநிலத்தில் திறந்தவெளி சிறைச்சாலைக்கான முறையான திட்டத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளை சிறந்த புனர்வாழ்வு மையங்களாக நிறுவ திடமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பழக்கமான குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் உட்பட நாட்டிற்கும் சமூகத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கும் கைதிகளுக்கு உயர் பாதுகாப்பு முகாம்கள் தயார் செய்யப்பட வேண்டும்.
சிறைகளில் மொபைல் போன்கள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதற்கு கடுமையான தண்டனை வழங்குவதை அமல்படுத்த வேண்டும். தற்போது சிறைச்சாலைகளை பொறுத்த அளவில் 1894-ம் ஆண்டு சிறைச்சாலை சட்டம் மற்றும் 1900-ம் ஆண்டு கைதிகள் சட்டம் ஆகியவைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே இதில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டி இருக்கிறது. சிறைகள் தண்டிக்கப்பட வேண்டிய இடங்கள் கிடையாது. அவை, மாற்றத்திற்கான இடம்.
அந்த மாற்றத்தை நாம்தான் ஏற்படுத்த வேண்டும். எனவேதான் மாதிரி சிறைச்சாலை சட்டம் 2023 மத்திய அரசால் தயாரிக்கப்பட்டது. மாநிலத்தை பொறுத்த அளவில் திறந்தவெளி சிறைச்சாலைக்கான முறையான திட்டத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் சிறை கைதிகளின் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும். பாஜக அரசின் நோக்கம் சிறைச்சாலைகளை தண்டனை கூடங்களாக மாற்றுவது கிடையாது. மாறாக சிறைச்சாலைகளை சீர்திருத்த இல்லங்களாக மாற்றவே நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.