சிவகங்கை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு விநியோகிக்கும் சிவப்பு நிற பொட்டாஷ் உரம், சொட்டுநீர் பாசன குழாய்களை அடைப்பதாக புகார் எழுந்துள்ளது.
பயிர்களுக்கு தேவையான முதன்மை சத்துகளில் சாம்பல் சத்து இன்றியமையாததாக உள்ளது. இது பொட்டாஷ் உரத்தில் கிடைக்கிறது. மேலும் பயிருக்கு பூச்சி தாக்குதலை தடுக்கும், நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். நெற்பயிர்கள் மழை வெள்ளத்தால் சாயாமல் திடமாக இருக்கவும், வறட்சியை தாங்கவும் உதவுகிறது.
சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படும் கரும்பு, காய்கறி பயிர்களுக்கு முக்கியமாக பயன்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக 50 கிலோ கொண்ட பொட்டாஷ் உரம் ரூ.875-ல் இருந்து ரூ.1,700-ஆக உயர்ந்தது. எனினும் இந்த உரத்தின் அவசியத்தால் விவசாயிகள் அதிகளவில் வாங்குகின்றனர்.
கடந்த காலங்களில் வெள்ளைநிற பொட்டாஷ் வழங்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளாக சிவப்பு நிற பொட்டாஷ் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கலக்கப்படும் சிவப்பு நிற பொடி சொட்டுநீர் பாசன குழாய்களை அடைத்துவிடுவதால், அடிக்கடி குழாய்களை மாற்ற வேண்டிய நிலை உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்
.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலைவர் ராமலிங்கம் கூறுகையில், “சொட்டுநீர் பாசன குழாய்களில் தண்ணீர் வெளியேறும் துளைகள் சிறிதாக இருக்கும். அவற்றை பொட்டாஷில் கலக்கப்படும் சிவப்புநிற பொடி அடைத்துவிடுகிறது. இதனால் அடிக்கடி குழாய்களை மாற்றுவதால் பொருட்செலவு அதிகரிக்கிறது. இதனால் வெள்ளைநிற பொட்டாஷ் வழங்க வேண்டும்” என்று கூறினார்.
இதுகுறித்து உர தரக் கட்டுப்பாடு வேளாண்மை அதிகாரிகள் கூறியதாவது: பொட்டாஷ் உரம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது சிவப்பு நிற பொட்டாஷ் உரங்கள் அதிகளவில் இறக்குமதியாகிறது. விவசாயிகள் விரும்பினால் வெள்ளை நிற பொட்டாஷ் பெற்று, வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினர்.