பாரீஸ்: பிரான்சில் 17 வயது சிறுவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கொன்றதால் அங்கு தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. இந்நிலையில் தான் வன்முறைக்கு நடுவே சூப்பர்மார்க்கெட்டில் நுழைந்த திருட சென்ற இளைஞரின் உயிர் ஒருநொடியில் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகர் அருக நான்டர் எனும் இடம் உள்ளது. இந்த பகுதிக்கு அல்ஜீரிய மற்றும் மொராக்கோ வம்சாவளியை சேர்ந்த 17 வயது நேல் என்ற சிறுவன் சென்றார். அப்போது அவன் போக்குவரத்து விதிமீறியதாக குற்றம்சாட்டி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் நேல் உடலில் கண்டு பாய்ந்தது. இதனால் அவன் சுருண்டு விழுந்தான். மேலும் சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவன் இறந்தார்.
இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் செயலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை தொடங்கினர். பள்ளிக்கூடங்கள், காவல் நிலையங்கள், போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், போலீசார், பாதுகாப்பு படையினர் இடையே கடும் மோதல் உருவாகி உள்ளது.
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் அமைதி காக்க வேண்டும் என பொதுமக்களிடம் கூறினாலும் கூட இந்த வன்முறை சம்பவங்கள் இன்னும் நிற்கவில்லை. இதில் 150க்கும் அதிகமான போலீசார், ஏராளமான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். 700க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்தும் வகையில் நான்டர் உள்பட பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் வன்முறை குறித்து புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தான் ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிரான்சின் வடமேற்கு பகுதியில் வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து திருட முயன்ற 20 வயது இளைஞர் இறந்தார்.
இவர் சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரையில் ஏறி உள்ளே நுழைய முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கூரையில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்திலேயே சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. அவரது உடல் பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர்.