சென்னை: அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்த உத்தரவை நிறுத்திவைப்பதாக தமிழக ஆளுநர் எழுதிய கடிதத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி தாக்கல் செய்துள்ள மனுவில், “அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்திவைத்த தமிழக ஆளுநர் ரவியின் கடிதத்தை ரத்து செய்ய வேண்டும். அரசியல் சாசனத்தின்படி ஆளுநர் எடுத்த முடிவை, மறுபரிசீனை செய்ய முடியாது. நீதிமன்றம்தான் அதை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும். ஆளுநர் முடிவு எடுத்த பிறகு, வேறு யாருடனும் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து எம்.எல்.ரவி தொடர்ந்துள்ள வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது நினைவுகூரத்தக்கது.
முன்னதாக, தமிழக மின்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியின்போது 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக, இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்த நிலையில், வழக்கை விரைவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை ஜூன் 14-ம் தேதி கைதுசெய்தனர்.
இதற்கிடையே, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதி, ஜூன் 28ம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைபெற உயர் நீதிமன்றம் அனுமதிவழங்கியது. இதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நீதிமன்றக் காவல் கடந்த 28-ம்தேதியுடன் முடிந்த நிலையில், காவலை ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, செந்தில் பாலாஜி கவனித்த மின்துறையைநிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறையை, அமைச்சர் முத்துசாமியிடமும் வழங்கு வதுடன், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது என்றும் முடிவெடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பினார். அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பதை ஏற்கமுடியாது என்று ஆளுநர் தெரிவித்திருந்தார்.
பின்னர், அவர் அமைச்சராக தொடர்வது, நேர்மையான விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மாநில செயல்பாடுகளுக்கும் இடையூறை ஏற்படுத்தும். இதை கருத்தில் கொண்டு, அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஜூன் 20ம் தேதி உத்தரவிட்டிருந்தார். அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் அந்த நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.