டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பயனர்களுக்கு கிரிக்கெட் ஸ்ட்ரீமிங்கை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளை கட்டணம் ஏதும் செலுத்தாமல் இலவசமாகப் பார்க்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை கிரிக்கெட் விளையாட்டை ஜனநாயகப்படுத்துவதையும், கட்டணச் சந்தா செலுத்தி பார்க்க முடியாத பார்வையாளர்களுக்கு சென்றடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஸ்ட்ரீமிங் தளம் கூறியுள்ளது.
ஆசியா கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்வதன் மூலம் அனைவரும் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க முடியும். இது ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவும் என நம்புவதாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தின் தலைவர் சஜித் சிவானந்தன் கூறினார். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஐ.பி.எல், ஆசிய கோப்பை 2022, ஐ.சி.சி ஆண்கள் டி20, பெண்கள் டி20 உலகக் கோப்பை ஆகிய போட்டிகளை இலவசமாக ஸ்ட்ரீம் செய்துள்ளது. சமீபத்தில் முடிவடைந்த இந்தியா vs இலங்கை, இந்தியா vs நியூசிலாந்து மற்றும் இந்தியா vs ஆஸ்திரேலியா ஆகிய போட்டிகளையும் இந்த தளம் ஸ்ட்ரீம் செய்தது.
ஜியோ நிறுவனம் இந்தியாவில் ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக ஸ்டிரீமிங் செய்தது. இது ஹாட்ஸ்டாருக்கு பெரும் அடியாக அமைந்த நிலையில், யூசர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இதனைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் யூசர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் ஹாட்ஸ்டார் இறங்கியுள்ளது. அந்தவகையில் ஜியோ வழியில் கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும் வசதியை வழங்க இருப்பதாக இப்போது ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.