புதுடெல்லி,
இந்த சீசனுக்கான டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் ஒன்று சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவரான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் கண்டார். காயத்தால் ஒரு மாதங்கள் ஓய்வில் இருந்த நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக்கில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில், 2வது முறையாக தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. 87.66 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெற்றி பெற்றார். ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் 2-வது இடமும், செக் குடியரசின் ஜாகுப் வாட்லெஜ் 3-வது இடமும் பிடித்தார்.
இதன்மூலம் டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்தார். நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு இதே தொடரில், 88.44 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
டைமண்ட் லீக் லீக்கில் பிரகாசித்ததற்காக வாழ்த்துக்கள் நீரஜ் சோப்ரா. அவரது அபாரமான ஆட்டத்தால் முதலிடம் பிடித்துள்ளார். அவரது திறமை, அர்ப்பணிப்பு மற்றும் சிறந்து விளங்குவதற்கான இடைவிடாத நாட்டம் பாராட்டுக்குரியது.. என தெரிவித்துள்ளார்.