சென்னை:
கோவையில் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து, பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்ட ஷர்மிளாவை பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சரமாரியாக விமர்சித்துள்ளார். மேலும் அவருக்கு கார் பரிசளித்த கமல்ஹாசனையும் கடுமையாக தாக்கி பேசினார் சவுக்கு சங்கர்.
கோவையில் தனியார் பேருந்து நிறுவனத்தில் பெண் ஓட்டுநராக பணிபுரிந்தவர் ஷர்மிளா. மூன்று மாதங்களுக்கு முன்பு தான் அவர் இப்பணியில் சேர்ந்தார். ஆனால் அதற்குள்ளாக அவரை வீடியோ எடுத்தும், புகைப்படங்கள் எடுத்தும் சமூக வலைதளங்களில் மக்கள் பரப்பியதால் ஓவர் நைட்டில் ஒபாமா என்பது போல ஃபேமஸ் ஆனார் ஷர்மிளா. அவரது பேருந்தில் கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் பயணம் செய்து பப்ளிசிட்டி தேடிக்கொண்டனர்.
அந்த வகையில், திமுக எம்.பி. கனிமொழி இரண்டு வாரங்களுக்கு முன்பு ஓட்டுநர் ஷர்மிளாவின் பேருந்தில் பயணித்தார். அப்போது அவரிடம் பெண் பயிற்சி நடத்துநர் டிக்கெட் கேட்டதால் ஷர்மிளா கோபம் அடைந்தார். இதுதொடர்பான தகராறில் ஷர்மிளாவை பேருந்து நிறுவன உரிமையாளர் டிஸ்மிஸ் செய்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பான நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் அந்தப் பெண்ணுக்கு கார் பரிசளித்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கோவையில் என்ன நடந்தது என்று அனைத்தையும் விசாரித்துவிட்டேன். அந்தப் பொண்ணுக்கு பெரிய சாமர்த்தியசாலினு நினைப்பு. இப்படி யூடியூபில் வருவதன் மூலம் அரசு வேலை வாங்கிடலாம்னு அந்த பொண்ணு நினைச்சிட்டு இருந்துருக்கு. அதுமட்டுமல்லாமல், பேஸ்புக், இன்ஸ்டா என சமூகவலைதளங்களில் தினமும் வைரல் ஆவதால் தன்னை நயன்தாரான்னே அந்தப் பொண்ணு நினைச்சிருச்சு. தான் ஒரு மிகப்பெரிய செலிபிரிட்டி, தான் எங்கே போனாலும் நினைத்ததை நடத்திவிடலாம் என்கிற எண்ணம் அந்தப் பொண்ணுக்கு வந்திருச்சு.
இந்த விஷயத்தை அவங்க குடும்பமும் ஊக்குவிக்கிறாங்க. நான் என்ன சொல்றேனா.. இந்த பொண்ணை பத்தி பேசுறதே தவறு. சமூகத்தில் அத்தனை விஷயங்களும் தவறுகளும் நடந்துட்டு இருக்கு. அதை பத்தியெல்லாம் பேசாமல், ஒரு சின்ன பொண்ணு தன்னோட சாமர்த்தியத்தால் அரசு வேலை வாங்கிடலாம்னு நினைக்கிறதுக்கு நாம துணைப்போக கூடாது. அதிலேயும் பெண் கண்டெக்டரை போடக்கூடாதுனு இந்தப் பொண்ணு சொல்லி இருக்கு. சேட்டையை பாருங்க.
அந்த பொண்ணுக்கு கார் பரிசாக கொடுத்துருக்காரு கமல்ஹாசன். பிக் பாஸ் என்ற ஆபாச நிகழ்ச்சியை நடத்தி அதில் வருகிற வருமானத்தின் மூலம் கட்சி நடத்துபவர் அவர். அவர் இதையெல்லாம் செய்யவில்லை என்றால்தான் ஆச்சரியம். கமலஹாசனுக்கு என்ன கொள்கை இருக்கு? மய்யம் என்பதெல்லாம் கொள்கையா? எங்கேயும் சாயாம நடுவில் போய் உட்கார்ந்து கொள்வதுதான் கொள்கையா? விளம்பர நோக்கத்துக்காகவே இப்படியெல்லாம் கமல்ஹாசன் செய்கிறார். இவ்வாறு சவுக்கு சங்கர் பேசினார்.