சென்னை: தமிழகத்தில் ரவுடிகள், கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும். பொதுமக்கள் – போலீஸார் இடையே நல்லுறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட டிஜிபி சங்கர்ஜிவால் தெரிவித்தார்.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். அந்த பணியிடத்துக்கு சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், டிஜிபி அலுவலகத்தில் புதிய டிஜிபியாக சங்கர்ஜிவால் நேற்று மதியம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக காவல் துறை பல்வேறு சிறப்பான பணிகளைச் செய்து வருகிறது. அதேநேரம் ரவுடிகள், கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும். போலீஸாரின் நலன் காக்க பல புதிய திட்டங்கள் உள்ளன. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அதை மேலும்சிறப்பாக்க நிறைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
காவல்துறையில் போதுமான காவலர்களை நியமிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.போலீஸார் – பொதுமக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏராளமான திட்டங்கள்: அதேபோல், காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வருவோரின் குறைகளை விரைந்து போக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்களின் நலன் காக்கும் நடவடிக்கையை மேம்படுத்த உள்ளோம். சாலை விபத்துகள் நடைபெற்ற இடங்களை அடையாளம் கண்டு, விபத்துகள் மற்றும் விபத்து மரணங்களை குறைக்கவும் முயற்சி எடுக்கப்படும். சென்னை பெருநகரில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அதில், எந்தெந்த திட்டங்களை தமிழகம் முழுவதும் கொண்டு வரலாம் என ஆலோசித்து வருகிறோம். முதல்வர் எப்படி எதிர்பார்க்கிறாரோ அவ்வாறு சிறப்பான பணி நடைபெறும். இவ்வாறு சங்கர் ஜிவால் கூறினார்.
டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்ட சங்கர் ஜிவாலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக டிஜிபிசங்கர் ஜிவால், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துபெற்றார்.