சென்னை: இனி வரும் படங்கள் எல்லாம் சர்ச்சையை வைத்தே ப்ரமோஷன் தேடிக் கொள்ளும் அஜெண்டா படங்களாக அதிகம் வரும் என்றே தெரிகிறது. விஜய் டிவி நாஞ்சில் விஜயன் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி அடுத்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளது.
இயக்குநர் ஆனந்த் தக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் அறிமுக ஹீரோ நடிக்கும் இந்த படத்தில் அவர் 10 பெண்களுக்கு ஒரே பெரிய தாலியை கட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் விஜய் டிவியின் நாஞ்சில் விஜயன் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த போஸ்டரை அவர் ஷேர் செய்துள்ளார்.
பஜனை ஆரம்பம்னு டைட்டில்: ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து, இரண்டாம் குத்து, பல்லுப் படாம பார்த்துக்கோ, நீ சுடத்தான் வந்தியா என வர வர சினிமா படங்களே பி கிரேட் படங்களுக்கு வைக்கப்படும் டைட்டில்கள் போல உருவாக்கப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது பஜனை ஆரம்பம் என்கிற டைட்டிலில் ஒரு படத்தை இயக்குநர் ஆனந்த் தக்ஷிணாமூர்த்தி இயக்கி வருகிறார். அதன் ஃபர்ஸ்ட் லுக் டைட்டிலை விட பல சர்ச்சைகளை கிளப்பும் விதமாக உருவாகி உள்ளது.
10 பொண்ணுங்களுக்கு தாலி கட்டும் ஹீரோ: அறிமுக நடிகர் ஹீரோவாக நடித்துள்ள அந்த படத்தில் விஜய் டிவியில் காமெடியில் கலக்கி வரும் நாஞ்சில் சம்பத் துணை நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள அந்த படத்தின் போஸ்டரில் 10 பெண்களுக்கு பெரிய தாலியை எடுத்து ஒட்டுமொத்தமாக அந்த ஹீரோ கட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படமெல்லாம் வெளியான தைரியத்தில் தற்போது அதை விட மோசமாக 10 பெண்களுக்கு ஒரு இளைஞன் தாலி கட்டும் விதமாக போஸ்டரை படக்குழுவினர் எந்தவொரு சமூக அக்கறையும் இன்றி வெளியிட்டுள்ளனர் என பத்திரிகை சந்திப்பிலேயே பல பத்திரிகையாளர்கள் விளாசினர்.
நாமம் போட்ட ஹீரோ: வடகலை, தென்கலை பிரச்சனை ஒரு பக்கம் அனல் பறக்க ஓடிக் கொண்டிருக்கும் போது மாமன்னன் படத்தில் கூட பகத் ஃபாசிலின் சாதி என்ன என்பதை தைரியமாக மாரி செல்வராஜே திட்டமிட்டு மறைத்த நிலையில், இந்த போஸ்டரில் நாம் போட்ட ஹீரோவை காட்டி ஐயங்கார்களை வம்புக்கு இழுத்துள்ளதாக ட்ரோல்கள் கிளம்பி உள்ளன.
படத்தின் இயக்குநரிடம் இதை பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப நாங்க ஒரு சின்ன டீம் புரமோஷனுக்காக இப்படி செய்கிறோம். படத்தில் இது ஒரு பாடல் காட்சி மட்டுமே அதுவும் கனவு சீன் படம் வந்தால் உங்களுக்கே புரியும் என பேசி மழுப்பி உள்ளார்.