பவன் கல்யாணுக்கு சாதனை டீசரைக் கொடுத்த சமுத்திரக்கனி
தமிழ் சினிமா இயக்குனர்கள் வேறு மொழிகளிலும் தங்களது தடத்தைப் பதிய வைத்துக் கொண்டிருக்கும் காலமாக இது இருக்கிறது. ஷாரூக்கான் நடித்து வரும் 'ஜவான்' படத்தை அட்லியும், பவன் கல்யாண் நடித்து வரும் 'ப்ரோ' படத்தை சமுத்திரக்கனியும் இயக்கி வருகிறார்கள். இந்த இரண்டு படங்களுக்கும் தற்போது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமுத்திரக்கனி இயக்கத்தில் பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் நடித்துள்ள 'ப்ரோ' படத்தின் டீசர் நேற்று முன்தினம் மாலை வெளியானது. நேற்று மாலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்த டீசர் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. பவன் கல்யாண் நடித்து இதுவரை வெளிவந்த படங்களின் டீசர்களில் அதிகப் பார்வைகளைப் பெற்ற டீசராக இது அமைந்துள்ளது. மேலும், 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற தெலுங்கு டீசர்களின் சாதனையில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
பிரபாஸ் நடித்து வெளிவந்த 'ராதேஷ்யாம்' டீசர் 24 மணி நேரத்தில் 42 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
பவன் கல்யாண் நடித்து வெளியான 'வக்கீல் சாப்' படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 8 மில்லியன் பார்வைகளைப் பெற்றதுதான் அவரது படங்களின் முந்தைய சாதனையாக இருந்தது. அதைவிட தற்போது 'ப்ரோ' டீசர் மூன்று மடங்கு பார்வைகளைப் பெற்றிருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.