ஷில்லாங்: “இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு, பன்முகத்தன்மையே நமது பலம். பொது சிவில் சட்டம் என்பது இந்திய சிந்தனைக்கு எதிரானது” என்று மோலயா முதல்வர் கான்ராட் சங்மா கூறியுள்ளார்.
தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், மேகாலயா முதல்வருமான கான்ராட் சங்மா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “வடகிழக்கு ஒரு தனித்தவமான கலாச்சாரம் மற்றும் சமூக அமைப்பைக் கொண்டது. நாங்கள் அப்படியே இருங்க விரும்புகிறோம். உதாரணமாக நாங்கள் தாய்வழிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதுவே எங்களுக்கான பலமாகவும் கலாச்சாரமாகவும் இருந்து வருகிறது. தற்போது அதனை மாற்ற முடியாது. பன்முகத் தன்மையே நமது கலாச்சாரம்; அதுவே நமது பலம். தற்போதைய சூழலில் பொது சிவில் சட்டம் இந்திய சிந்தனைக்கு எதிரானது. என்றாலும் என்ன மாதிரியான மசோதா தக்கல் செய்யப்பட இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. அந்த வரைவின் உண்மையான விஷயங்களை பார்க்காமல் அது குறித்த விபரங்களைக் கூறுவது கடினம்”. இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் வலியுறுத்தல்: மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் பாஜக நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இருவிதமான சட்டங்களால் நாட்டு நிர்வாகத்தை நடத்த முடியாது. நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம். ஆனால், பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்’’ என்று தெரிவித்திருந்தார்.
எதிர்கட்சிகள் எதிர்ப்பு: ஆம் ஆத்மி கட்சி மற்றும் சிவசேனா (யுடிபி) ஆகிய இரண்டு எதிர்க்கட்சிகள் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பெரும்பாலன எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கருத்துக்கேட்பு: இதனிடையே வரும் திங்கள்கிழமை( ஜூலை 3) அன்று சட்ட ஆணையம் மற்றும் சட்ட அமைச்சகப் பிரதிநிதிகளுக்கு சட்டத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அழைப்பு விடுத்திருக்கிறது. பொது சிவில் சட்டத்தில் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து பெறப்பட்ட கருத்துகள் பற்றிய விவாதத்துக்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கெனவே, பொது சிவில் சட்டம் குறித்து நாட்டு மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளை கடந்த 14-ம் தேதி முதல் தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை லட்சக்கணக்கானோரிடம் இருந்து கருத்துகளை சட்ட ஆணையம் பெற்றுள்ளதாக அதன் தலைவர் நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தெரிவித்துள்ளார். ஜூலை 14-ம் தேதி வரை அனைத்து தரப்பினரும், பொது சிவில் சட்டம் குறித்த தங்கள் கருத்துகள், எதிர்ப்புகளை சட்ட ஆணையத்திடம் தெரிவிக்க அவகாசம் தரப்பட்டு உள்ளது.
குழப்பம்: இந்தநிலையில், பாஜக கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் கட்சியிடமிருந்து பொது சிவில சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பி இருப்பது தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பம் நிலவுவதை எடுத்துக்காட்டுவதாக கூறப்படுகிறது. மேகாலயாவில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பாக பாஜகவுடன் ஏற்பட்ட பிளவு காரணமாக தேசிய மக்கள் கட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. தேர்தலுக்கு பின்னர் கான்ராட் சங்மா கட்சி ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.
மழைக்கால கூட்டம்: இதனிடையே, இந்த மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டத்தை தாக்கல் செய்து அதனை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு அனுப்பப்படும் பட்சத்தில் நாடாளுமன்ற நிலைக்குழுவானது பொது சிவில் சட்டம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் இருந்து கருத்துகளைப் பெறும் என்று தெரிகிறது.