மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது எவ்வாறு செயல்படுத்தப்படப் போகிறது, யாரெல்லாம் இதன் பயனாளர்கள், என்பது குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை எந்த பிசிறும் இல்லாமல் செயல்படுத்துவதற்காக சிறப்பு அதிகாரியை நியமித்து உத்தரவிட்டுள்ளார் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இளம் ஐஏஎஸ் அதிகாரி இளம் பகவத் இத்திட்டத்திற்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு கொண்டு வரும் சிறப்புத் திட்டங்களை ஆரம்ப கட்டங்களில் செயல்படுத்தும் அதிகாரிகளில் ஒருவராக இவர் வலம் வருகிறார்.
தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையின் இயக்குநராக இருந்த இளம் பகவத், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடங்கப்பட்டபோது அதன் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான காலை உணவுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராகவும் இளம்பகவத் நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநராக தற்போது பணியாற்றும் இவருக்கு கூடுதல் பொறுப்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் பணியும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தகுதி வாய்ந்த ஒரு கோடி பேருக்கு இத்திட்டம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்தோரை தேர்ந்தெடுப்பதற்கான ஆய்வு, கணக்கெடுப்பு பணி ஆகிய அனைத்தும் ஏற்கெனவே தொடங்கி, நடைபெற்று வந்த நிலையில் விரைவில் இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ளன.
ஆசிரியர்கள் ஓய்வூதியம் பெற ரத யாத்திரை
இதில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள பெண்கள், வருமான வரி செலுத்துபவர்கள், சொந்த வீடு, நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படமாட்டாது என்று கோட்டை வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.