மக்கள் தொகை பெருக்கம் இந்தியாவின் வளர்ச்சியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

இதுவரையில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனா முதலிடம் வகித்துவந்தது. தற்போது, இந்தியா முதலிடத்துக்கு நகர்ந்துள்ளது. ‘வேர்ல்டு பாப்புலேஷன் ரிவியூ’ (World Population Review) அமைப்பின் கணக்கீட்டின்படி, இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 142.78 கோடியாகவும். சீனாவின் மக்கள் தொகை 142.56 கோடியாகவும் உள்ளது.

முன்பு, மக்கள் தொகை பெருக்கம் என்பது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் காரணியாக பார்க்கப்பட்டது. இந்தப் பார்வையின் நீட்சியாகத்தான் 1970-களில் – இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு தீவிரமாக்கப்பட்டது. அந்த சமயத்தில் இந்தியா பொருளாதார ரீதியாக பின்தங்கி இருந்தது. தற்போது மக்கள் தொகை பெருக்கம் மீதான உலகளாவிய பார்வை மாறி இருக்கிறது. உலக அளவில் பொருளாதார வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் தொகை பெருக்கம் என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் காரணியாக பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில்தான், மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்தி இருப்பது, சர்வதேச கவனம் ஈர்த்து இருக்கிறது.

மக்கள் தொகை என்பது பெரும் சந்தை வாய்ப்பை உருவாக்கக் கூடியது. மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அதற்கேற்ப நுகர்வும் அதிகரிக்கும். நுகர்வைப் பூர்த்தி செய்ய உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். அதிக தொழில் வாய்ப்புகள் உருவாகும். இந்தச் சந்தையை வாய்ப்பைப் பயன்படுத்த உள்ள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் பெருகும். இந்தியாவைப் பொறுத்தவரையில், 2050-ல் தனிநபர் வருமானம் 700 சதவீதம் உயர்ந்து 16 ஆயிரம் டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் நுகர்வு திறன் தற்சமயம் இருப்பதை விட 4 மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மக்கள் தொகை அதிகரிப்பு என்பது சந்தை வாய்ப்பு என்பதைத் தாண்டி, வேறொரு காரணத்துக்காகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சீனாவின் மக்கள் தொகை இந்தியாவை ஒப்பிடுகையில் பின்தங்க மட்டும் செய்யவில்லை, சரியவும் ஆரம்பித்திருக்கிறது. 2050-ல் இந்தியாவின் மக்கள் தொகை 160 கோடியாக அதிகரித்திருக்கும் என்றும் சீனாவின் மக்கள் தொகையோ 130 கோடியாக குறைந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2050-ல் இந்தியர்களின் சராசரி வயது 38-ஆக இருக்கும் என்றும் அதுவே சீனாவின் சராசரி வயது 50-ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், அதன்மக்கள் தொகையில் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 15 முதல் 64 வயது என்பது வேலை செய்வதற்குரிய வயதாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்த வயதுக்குட்பட்டவர்களே ஒரு நாட்டின் வேலைசார் கட்டமைப்பில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.

தற்சமயம் இந்தியர்களின் சராசரி வயது 29 ஆக உள்ளது. தற்போதைய கணிப்பின்படி, இன்னும் 30 ஆண்டுகளில் அது அதிகபட்சமாக 38-ஆகவே உயரும். இதனால், இந்திய மக்கள் தொகையில், வேலைசார் கட்டமைப்பில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இது தொழில் வளர்ச்சியில் இந்தியாவுக்கு பெரும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது

தற்போது இந்தியா பொருளாதார ரீதியாக பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 2030-க்கு ஆண்டுக்குள் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் அதன் டிஜிட்டல் கட்டமைப்பும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பெருக்கமும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. தற்போது அறிமுகமாகியுள்ள 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவின் அனைத்துத் துறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பேர் தாரளமய அறிமுகத்துக்கு – அதாவது 1990-க்கு – பிறகு பிறந்தவர்கள். இவர்கள் நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளும் திறன்களைக் கொண்டிருப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. அந்தவகையில், இந்தியாவின் அடுத்த 30 ஆண்டுகால தொழில்நுட்ப வளர்ச்சியிலும் இளைய தலைமுறையினரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும்.

அதேசமயம், மக்கள் தொகை பெருக்கம் சார்ந்து இந்தியாவுக்கு நிறைய சவால்களும் இருக்கின்றன. தற்போது இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகத் தீவிரமாக நிலவுகிறது. கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் இந்தியா பின்தங்கி உள்ளது. வேலைவாய்ப்பு சார்ந்தும் கடும் நெருக்கடியில் இந்தியா உள்ளது. வேலைசார் கட்டமைப்பில் பெண்களின் பங்கு மிகக் குறைவாக உள்ளது. இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதன் வழியாகவே, அதிகரித்துவரும் மக்கள் தொகையை, வளர்ச்சிக்கான வாய்ப்பாக இந்தியா பயன்படுத்திக்கொள்ள முடியும். இல்லையென்றால், அது கூடுதல் சுமையாக மாறும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.