புதுடெல்லி: சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குவது தொடர்பாக மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து ட்விட்டர் தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அத்துடன், ரூ.50 லட்சம் அபராதமும் ட்விட்டர் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்டது.
விவசாயிகள் போராட்டத்தின்போது போடப்பட்ட சில பதிவுகள் மற்றும் தொடங்கப்பட்ட கணக்கு களை நீக்க கோரி ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்த உத்தரவினை எதிர்த்து ட்விட்டர் நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு ஜூலை மாதம் மனுத்தாக்கல் செய்தது. அப்போது, மத்திய அரசின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது என்றும் பேச்சுரிமை மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு இது எதிராக உள்ளது என்றும் நீதிமன்றத்தில் ட்விட்டர் கூறியிருந்தது.
இதையடுத்து, பதிவுகளை நீக்குவது தொடர்பாக உரிய காரணங்களை தெரிவிக்குமாறு மத்திய அரசிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்குதொடர்பான இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித் தனது உத்தரவில் கூறும்போது: மத்திய அரசுக்கு எதிரான ட்விட்டர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கணக்குகளை முடக்க கோரும் அதிகாரம் அரசுக்கு உண்டு. உத்தரவுகளை பின்பற்றாமல் ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
இதற்காக, அந்த நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை கர்நாடக சட்ட சேவைகள் ஆணையத்தில் 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
இந்திய அரசியலமைப்பின் 19 மற்றும் பிரிவு 21 ஆகியவற்றின் கீழ் இந்திய குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்து சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட உரிமையை வெளிநாட்டு நிறுவனமான ட்விட்டர் கோர முடியாது. இவ்வாறு நீதிபதி கிருஷ்ணா உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.