வாஷிங்டன்: உலகம் முழுவதும் ட்விட்டர் முடங்கியதால் பயனர்கள் கடும் அவதி அடைந்த நிலையில், சில மணி நேரங்களில் எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு நெட்டிசன்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர் நேற்று இரவு சர்வதேச அளவில் முடங்கியது. எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய பிறகு ஒரே ஆண்டில் 3-வது முறையாக ட்விட்டர் முடங்கியுள்ளது. நெட்டிசன்கள் ட்விட்டரை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டதால் ட்விட்டரை கடுமையாக விமர்சித்தனர். RIP ட்விட்டர் என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டர் பதிவுகள் இன்று டிரெண்டிங்கில் முன்னிலை வகித்தது.
பலமணி நேரம் ட்விட்டரை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் வசைபாடினர். ட்விட்டர் முடங்கியாதாக வெளியான சில மணி நேரத்தில் எலான் மஸ்க் தனது ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில், டேட்டா ஸ்கிராப்பிங் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சில தற்காலிக கட்டுபாடுகள் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் அதன்படி வெரிஃபைடு அதாவது ப்ளூ டிக் சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு 6000 பதிவுகளைப் படிக்க முடியும்.
ட்விட்டரில் இருக்கும் மற்ற சாதாரண பயனாளர்கள் 600 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும். புதிதாக ட்விட்டருக்கு வரும் unverified பயனாளர்கள் இனி ஒரு நாளைக்கு 300 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார். எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பு நெட்டிசன்கள் பலருக்கும் கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது. டிவிட் களை படிப்பதற்கு கட்டுப்பாடுகளை விதித்த எலான் மஸ்க்கிற்கு கமெண்டுகள் குவிந்தன.
எலான் மஸ்க் அறிவித்ததுமே நெட்டிசன் ஒருவர் கூறுகையில், நான் ஒரு நிமிடத்தில் நுற்றுக்கணக்கான ட்விட் பதிவுகளை படிப்பேன். எனவே எலான் மஸ்க்கின் இதே நடவவடிக்கை தொடர்ந்தால் ட்விட்டர் முடிந்து போகும் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு நெட்டிசன் பதிவிடுகையில், சமூக வலைத்தள செயலிகள் இம்ப்ரெஷன்ஸ் மற்றும் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதை வைத்தே விளம்பர வருவாய் ஈட்டுவதாகவும் ட்விட்டரோ பயனாளர்களை அதிக நேரம் பயன்படுத்த விடாமல் செய்வதாகவும் சாடி பதிவிட்டுள்ளார்.