அமீர், அப்துல், அப்ரார் மூவரும் பள்ளி நாட்களில் இருந்தே நண்பர்கள். அமீர் முதல் முறையாக ஹாலிவுட் படங்களைப் பார்த்து, அதில் வரும் விஷுவல் எஃபக்ட்ஸ் மூலர் ஈர்க்கப்பட்டார். ஒரே ஒரு கம்ப்யூட்டரில் இவ்வளவு விஷயங்கள் செய்ய முடியமா என்று வியந்து, உடனே தன்னிடம் இருந்த ஒரு லேப்டாப்பில், யூடியூப் மூலமாகவே VFX கற்க ஆரம்பித்தார். அது குறித்து பேசிய அமீர்,
”முதல்ல என் நண்பர்களை ஒரு க்ரீன் ஸ்க்ரீன் முன்னாடி ஏதாவது செய்ய வைத்து, அதை வீடியோ எடுத்துக்கொள்வேன். பின், அவர்களை பறக்க வைப்பது போல, மலையிலிருந்து குதிப்பது போல எல்லாம் VFX செய்ய ஆரம்பித்தேன். அந்த வீடியோவை எல்லாம் நண்பர்களிடம் காட்டும் போது, அவர்கள் நான் ஏதோ மேஜிக் செய்ததைப் போல ஆச்சரியப்படுவார்கள். அதனால், அடுத்த முறை இன்னும் நேர்த்தியாக செய்ய வேண்டும் என்று VFX கற்க ஆரம்பித்தேன்
வளர்ந்த பின்னும், அந்த ஆர்வம் குறையவில்லை. தொடர்ந்து நண்பர்களுடன் விளையாட்டாக வீடியோக்கள் செய்து அதை யூடியூபிலும் சமூக வலைதளங்களிலும் ரிக்கட் இந்தியன் (Rigged Indian) என்ற பக்கம் ஆரம்பித்து அதில் வெளியிட்டேன். ஒரு நாள், சிவப்பு சிக்னலை மீறி வாகனங்கள் செல்லாமல் இருக்க, சிகப்பு சிக்னலின் போது ரோட்டிலிருந்து மேலே எழும் ’ரோட் ப்ளாகர்ஸ்’ (Road Blockers) என்ற தொழில்நுட்பத்தை 3D VFXல் உருவாக்கினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மக்கள் அதை உண்மை என்று நம்பி, நேராக அந்த இடத்திற்கு சென்று உண்மையிலேயே ரோட் ப்ளாகர்ஸ் இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்துவிட்டனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அப்ரார், வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருந்து நேரடியாக சென்று வீடியோக்கள் ஷூட் செய்யும் பொறுப்பில் இருக்கிறார். ”இது போன்ற பயனுள்ள, சென்னையை ஸ்மார்ட் சிட்டியாக்கும் வீடியோக்களை உருவாக்கி பதிவிடுமாறு மக்கள் கேட்டனர் . அதனால், அவர்களுடைய விருப்பத்தை ஏற்று சுத்தமான கூவம் ஆற்றில் மக்கள் போட்டிங் போவது போல, பேருந்து எங்கே வருகிறது என்று கணிக்க ஒவ்வொரு நிறுத்தத்திலும் ‘Virtual Tracking’, மக்களுக்கு மிகவும் பிடித்த ட்ராம் ரயில், புல்லட் ரயில், மெரினாவில் கேபிள் கார், சிக்னல் ஸ்டாப்பர் போன்ற பல தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் வீடியோக்களை செய்தோம். பலரும் இது 3D VFXல் உருவானது என்று தெரியாமல், வெளியூரில் இருந்து எல்லாம் வந்து மெரினாவில் கேபிள் கார், ட்ராமில் எல்லாம் பயணிக்க போவதாகக் கூறினர். இது எல்லாம் உண்மை இல்லை என்று சொல்லி, இது 3D VFXல் உருவானது என்று விவரித்தோம்.
அடுத்து சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பிரமாண்டமாக தயாராகி வந்தன. அந்த சமயம், நேப்பியர் பாலத்தில் செஸ் போர்ட் போன்ற சதுரங்கத்தை வரைந்திருந்தார்கள். அதைப் பார்த்து நாங்கள் சில 3D VFX வீடியோக்கள் பதிவேற்ற ஆரம்பித்தோம். அதை பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவன் எங்களை அணுகினார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு சில வீடியோக்கள் செய்துக்கொடுக்க சொன்னார். சென்னையில் எங்கு வேண்டுமானாலும் வீடியோக்கள் எடுத்துக்கொள்ளவும், போட்டிகள் நடக்கும் இடத்திற்கு எங்களுக்கு முழு அனுமதியும் கொடுத்தார். அந்த நிகழ்ச்சி ப்ரமோஷனுக்காக பல வீடியோக்களை நாங்கள் உருவாக்கி கொடுத்தோம். நிகழ்ச்சியின் இறுதி நாளில், ஒவ்வொரு நாட்டின் கொடியுடன் செஸ் காய்கள் செல்ல, தம்பி அதற்கு வணக்கம் சொல்லும் வீடியோ நல்ல வரவேற்பைப் பெற்றது” என்றார்
கடைசியாக பேசிய அப்துல், ஐடி துறையில் வேலை செய்துகொண்டே ரிக்கட் இந்தியன் சேனலின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். “இதற்கடுத்து ஐபிஎல் குழுவிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை அறிமுகம் செய்ய 3D VFX வீடியோக்கள் தயாரிக்கச் சொன்னார்கள். ஏலத்தில் ஒவ்வொரு வீரரும் தேர்வானதும், உடனே அந்த வீடியோவை வெளியிட வேண்டும். வெறும் ஒரு வாரம் மட்டுமே இருந்தது. ஒரே நாளில் பத்து வீடியோக்கள் வெளியிட வேண்டும். அமீர் வெளிநாட்டில் இருந்தார். அங்கிருந்தே மூன்று நாட்கள் தூங்காமல் வீடியோக்கள் உருவாக்குவது என்று முடிவானது. நாங்கள் இங்கே சென்னையில் வீடியோக்களை பதிவு செய்து அதை அனுப்புவோம். அமீர் அங்கே அதில் 3D VFX காட்சிகளை சேர்ப்பார். அந்த ஐபிஎல் வீடியோக்கள் எல்லாமே எங்களுக்கு மிகவும் சவாலாகவும் அதே நேரம் எங்களுக்கு நல்ல வரவேற்பையும் கொடுத்தது. இப்போது, பல தனியார் நிறுவனங்களுக்கு 3D VFXல் விளம்பரப் படங்கள் உருவாக்கி கொடுத்து வருகிறோம். தொடர்ந்து சென்னை அழகாக்கும் ஸ்மார்ட் சிட்டி 3D VFX வீடியோக்களையும் செய்து வருகிறோம்.
நாங்கள் உருவாக்கிய சில 3D VFX வீடியோக்களைப் பார்த்து அது சென்னையின் சுற்றுலா வளர்ச்சிக்காக உண்மையிலேயே நடைமுறைப்படுத்தப் போவதாக செய்திகள் வந்தன. மெரினாவில் கேபிள் கார், ட்ராம் ரயில் போன்ற திட்டங்கள் உண்மையிலேயே சாத்தியமாகும் பணிகள் நடந்து வருவதாக செய்திகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். எங்களின் வீடியோ இந்த திட்டங்களுக்கு ஒரு உந்துதலாக இருந்திருக்கலாம் என்று நினைக்கும்போது பெருமையாகவே இருக்கிறது” என்கிறார்.