நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே இருக்கிறது கணவாய்பட்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்த அபினேஷ், பிலிப்பாகுட்டையைச் சேர்ந்த நித்திஷ்குமார், விக்னேஷ் ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். இந்த மூன்று பேரும் அருகிலுள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில், இன்று மதியம் இரண்டு மணியளவில் கணவாய்பட்டியிலிருந்து இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் பிலிப்பாகுட்டையை நோக்கிச் சென்றிருக்கின்றனர். அப்போரு, கணவாய்பட்டி அருகேயுள்ள வளைவில் அவர்கள் சென்றபோது, திடீரென்று அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தில் பிரேக் கட் ஆனதால், சாலையோரம் உள்ள 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்திருக்கின்றனர்.
அந்தக் கிணற்றில் 15 அடிக்கு தண்ணீரும், 10 அடிக்கு களிமண் சேறும் இருந்திருக்கிறது. மூன்று மாணவர்களும் அதில் சிக்கிக் கொள்ள, இதனை அறிந்த கணவாய்பட்டி பகுதியைச் சேர்ந்த அபினேஷின் தந்தை குப்புசாமி, அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், அசோகன் ஆகிய மூன்று பேரும், அந்த மூன்று மாணவர்களையும் காப்பாற்ற கிணற்றில் குதித்திருக்கின்றனர். இந்த நிலையில், மாணவர்களைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த அவர்கள் மூன்று பேரும் சேற்றில் சிக்கிக் கொள்ள, இதனையறிந்த அந்தப் பகுதி மக்கள் ராசிபுரம் தீயணைப்புத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதனால், சம்பவ இடத்துக்கு, ஒரு தீயணைப்பு வாகனத்தில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் கட்டிலை இறக்கி அபினேஷ், நித்திஷ்குமாரை உயிருடன் மீட்டனர்.
அவர்கள் இருவரையும் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்ததோடு, அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மற்ற நான்கு பேரும் களிமண் சேற்றில் சிக்கிய நிலையில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் முழுவதும் கசிந்து அந்த நீரை பருகியதால் மயக்கமடைந்து மூழ்கியதாகத் தெரிகிறது. கிரேன் உதவியுடன் 4 மணி நேரமாக அவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், கிணற்றிலுள்ள தண்ணீரை முழுவதையும் வெளியேற்றிய பிறகு, மாணவர் உட்பட 4 பேர் உடல்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். தன் மகனைக் காப்பாற்ற சென்ற தந்தையும், அவருக்கு உறுதுணையாக உள்ளே இறங்கிய இருவரும் உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரிழந்த நான்கு பேரின் உடல்களும், பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன.
சம்பவ இடத்தில் ராசிபுரம் டி.எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஷி.உமா சம்பவ இடத்துக்குச் சென்று, கிணற்றில் மூழ்கி இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். சாலை ஓரமாக இருக்கும், ரவிச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான அந்தக் கிணற்றில் சுற்றுச்சுவர் இல்லாததுதான் இந்த பரிதாப பலிகளுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. கிணற்றில் விழுந்த மாணவர்களைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த 3 பேர் உட்பட 4 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.