Canadian politics encouraging Khalistan terrorists! | காலிஸ்தான் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் கனடா அரசியல்!

டொரான்டோ-உள்நாட்டு காரணங்கள் மற்றும் ஓட்டு வங்கி அரசியலுக்காகவே காலிஸ்தான் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை கனடா அரசு ஊக்குவிப்பதாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

நம் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற ஏராளமானோர் உலகம் முழுதும் உள்ள பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவை பூர்வீகமாக உடைய பலர், வட அமெரிக்க நாடான கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர்.

குறிப்பாக, நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சென்ற சீக்கியர்கள், கனடாவில் அரசுத் துறை மட்டுமின்றி தனியார் அமைப்புகளிலும் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர்.

நடவடிக்கை

இவர்களில் ஒரு பகுதியினர், நம் நாட்டில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்புக்கு நீண்ட காலமாக ஆதரவு அளித்து வருகின்றனர்.

இதனால், கனடாவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளனர்.

குறிப்பாக, 1984க்குப் பின் பிறந்தவர்கள் மத்தியில், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதை நோக்கமாக வைத்து, அவர்களது செயல்பாடுகள் அமைந்துள்ளன.

கனடாவிற்குள் ஒரு பெரிய பயங்கரவாதப் படையை உருவாக்கி, அங்கிருந்தபடியே கொலைகள், குண்டு வெடிப்புகள் உள்ளிட்ட சமூக விரோத நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

நம் நாட்டில் பஞ்சாப், புதுடில்லி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சீக்கியர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத நடவடிக்கைகளை அவர்கள் அரங்கேற்றி வருகின்றனர்.

‘பாபர் கல்சா இன்டர்நேஷனல்’ அமைப்பின் உறுப்பினர் லக்பீர் சிங் சந்து என்ற லண்டா, அவரது கூட்டாளிகளான தீபக், உதவியாளர் அர்ஷ் தல்லா, ஹர்தீப்சிங் நிஜ்ஜார் போன்றோர் இதில் அடங்குவர்.

இதில், பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சமீபத்தில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது-.

காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை கனடாவில் நடத்தினர்.

கடந்த மாதம் 4ல், இங்குள்ள பிராம்டன் நகரில் காலிஸ்தான் சார்பில் நடந்த பிரமாண்ட அணிவகுப்பில், சீக்கிய மெய்க்காப்பாளர்களால் முன்னாள் பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்டதை சித்தரிக்கும் காட்சி இடம்பெற்றது.

எதிர்பார்ப்பு

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘இது இரு நாட்டு உறவுக்கு நல்லதல்ல’ என, எச்சரித்தார்.

நம் நாட்டில் இருந்து தப்பிச் சென்று, அங்கு வசிக்கும் தேடப்படும் குற்றவாளிகளை ஒப்படைப்பது குறித்து நம் நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பு பல முறை வலியுறுத்தியும், அது குறித்து எந்த பதிலையும் கனடா அரசு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், ஓட்டு வங்கி அரசியலுக்காகவே, காலிஸ்தான் பயங்கரவாத களின் நடவடிக்கைகளை அந்நாடு ஊக்குவிப்பதாக கண்டனக் குரல்கள் எழுந்து உள்ளன.

குறிப்பாக அந்நாட்டு பிரதமர் தேர்தலின்போது, பெருமளவு வசிக்கும் சீக்கியர்களின் ஓட்டு அவசியம் என்பதால், அவர்களது செயல்பாடுகளை கனடா மறைமுகமாக ஆதரிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

latest tamil news

அதே சமயம், அரசு சுமூகமாக இயங்க பல்வேறு துறைகளில் உயர்மட்ட அளவில் பணிபுரியும் சீக்கியர்களின் ஆதரவு தேவை என்பதையே இது காட்டுவதாக கருத்துக்கள் எழுந்துள்ளன.

பயங்கரவாத அமைப்புகளுக்கு உலகின் எந்த நாடும் ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்பது ஐ.நா., அமைப்பின் விதியாக உள்ள போது, சீக்கியர்களின் ஆதரவை பெறுவதற்காக, காலம் காலமாக காலிஸ்தான் அமைப்புக்கு கனடா அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுப்பதன் வாயிலாக, தன் காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கைவிட்டு, இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் பிற நாடுகளுக்கு கனடா முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பது அரசியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.