பீஜிங், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, வரும் 4ம் தேதி நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஷீ ஜின்பிங் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து, 2001ல், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு என்ற அமைப்பை உருவாக்கின.
இந்த அமைப்பில், 2017ல் இந்தியாவும், பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பினர்களாக இணைந்தன. இதன் வருடாந்திர மாநாட்டை, ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் நடத்தி வரும் நிலையில், இந்த ஆண்டு நம் நாடு நடத்துகிறது.
இதையடுத்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தலைவர்களின், 23வது மாநாடு வரும் 4-ம் தேதி நடக்க உள்ளது.
இதில், இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
”பிரதமர் நரேந்திர மோடி அழைப்பை ஏற்று, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடக்கும் மாநாட்டில், சீன அதிபர் ஷீ ஜின்பிங் பங்கேற்று முக்கிய கருத்துக்களை தெரிவிப்பார்,” என, அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் நேற்று தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு நம் நாடு தலைமையேற்ற பின், இந்த அமைப்பின் மாநாட்டில் சீன அதிபர் ஷீ ஜின்பிங் பங்கேற்பது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் பங்கேற்க உள்ளதாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்