புதுடில்லி: பால் பொருட்கள் முதல் நெய் வரை இந்திய பொருட்களுக்கு உலகளவில் தேவை அதிகரித்து உள்ளது எனவும், சிறுதானியங்களுக்கு புதிய சந்தை உருவாகி உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இந்திய கூட்டுறவு சங்கத்தின் 17 வது மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ், இடைத்தரகர்கள் தலையீடு இன்றி, கோடிக்கணக்கான சிறு விவசாயிகள் பலனடைந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில், இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் ரூ.2.5 லட்சம் கோடி நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளது. 2014க்கு முன்பு, விவசாயத்துறையில் 5 ஆண்டுகளில், ஒரே திட்டத்திற்கு மட்டும் 90 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டது. தற்போது, நாம் அதனை கடந்து விட்டோம். பிரதமர் கிஷான் சமான் நிதி திட்டத்தில், இதனை விட 3 மடங்கு நிதி செலவு செய்யப்பட்டு உள்ளது. இந்திய விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் கிடைக்கிறது
அரசின் பலன்கள், பயனாளிகளுக்கு நேரடியாக சென்று சேரும் வகையில், டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பணப்பரிமாற்றத்தை சார்ந்து இருப்பதை குறைப்பதே, இந்த திட்டத்தின் நோக்கம். டிஜிட்டல் பரிமாற்றத்தில் இந்தியாவின் ஆதிக்கமானது, உலகளவில் நமது அடையாளமாக மாறி உள்ளது. கூட்டுறவுத்துறையிலும் இதனை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். டிஜிட்டல் பரிமாற்றத்தால் வெளிப்படைத்தன்மை அதிகரித்து உள்ளது. ஆன்லைன் பரிமாற்றம் நாட்டிற்கு பயனளிக்கும். தொழில்நுட்பம் சார்ந்த பிரச்னைகளை மத்திய அரசு தீர்த்து வைத்து உள்ளது.
பால் பவுடர் முதல் நெய்வரை இந்திய பொருட்களுக்கு உலகளவில் தேவை அதிகரித்து உள்ளது. சிறு தானியங்களுக்கு புதிய சந்தை உருவாகி உள்ளது. இதன் மூலம் சிறு விவசாயிகள் பலன் பெற முடியும். ஏற்றுமதியை அதிகரிக்க கவனம் செலுத்தி வருகிறோம். அரிசி மற்றும் கோதுமையில் இந்தியா மட்டுமே தன்னிறைவு பெற்றுள்ளது.
மீன்வளத்துறையில் 25 ஆயிரம் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இது மீனவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதுடன், அவர்களின் சம்பாதிக்கும் திறனை அதிகரித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் உள்நாட்டு மீன்பிடி தொழில் 2 மடங்கு வளர்ந்து உள்ளது. கூட்டுறவுத்துறைக்கு என தனி அமைச்சகத்தை மத்திய அரசு தான் உருவாக்கியது. நாட்டின் வளர்ச்சியில் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement