சென்னை: மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் கடந்த 29ம் தேதி வெளியானது.
பக்ரீத் ஸ்பெஷலாக வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனம் கிடைத்துள்ளது.
அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் மாமன்னன் படத்திற்கு சிறந்த ஓபனிங் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இரண்டே நாட்களில் மாமன்னன் படத்தின் சக்சஸ் மீட்டிங்கை நடத்தி முடித்துள்ளது படக்குழு.
இரண்டே நாளில் மாமன்னன் சக்சஸ் மீட்: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் கடந்த 29ம் தேதி வெளியானது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியான மாமன்னன் படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள மாமன்னன், மாரி செல்வராஜ்ஜுன் ஹாட்ரிக் ஹிட்டாக அமைந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் மாமன்னன் படத்தில் நடித்துள்ளனர். இவர்களில் வடிவேலு, ஃபஹத் பாசில் இருவரின் நடிப்பும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை காமெடியனாக கலக்கி வந்த வடிவேலு, முதன்முறையாக ரொம்பவே சீரியஸ்ஸான கேரக்டரில் நடித்து கம்பேக் கொடுத்துள்ளார்.
இன்னொரு பக்கம் ஃபஹத் பாசில் தனது வில்லத்தனமான நடிப்பால் மாமன்னன் படத்தின் நிஜ அரசியலை ரசிகர்களுக்கு கடத்திவிட்டார் எனலாம். இதையெல்லாம் கடந்து ஏஆர் ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் மாமன்னன் படத்தை இன்னொரு தரத்தில் கொண்டு சென்றுவிட்டது. முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்துள்ள மாமன்னன் படம், இதுவரை 15 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம்.
இந்நிலையில், மாமன்னன் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இயக்குநர் மாரி செல்வராஜ், உதயநிதி, கீர்த்தி சுரேஷ் மூவரும் ஏஆர் ரஹ்மான் வீட்டிற்கே சென்று மாமன்னன் வெற்றியை கொண்டாடியுள்ளனர். ஏஆர் ரஹ்மானை கேக் வெட்ட வைத்து மாமன்னன் வெற்றியை கொண்டாடியுள்ளார் உதயநிதி. அப்போது ஏஆர் ரஹ்மானின் மகன் அமீனும் அருகில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மாமன்னன் சக்சஸ் மீட் புகைப்படங்களை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் மாரி செல்வராஜ். இந்தப் படத்தின் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், ஏஆர் ரஹ்மானுக்கும் நன்றி கூறியுள்ளார். இந்த டிவிட்டர் போஸ்ட்டில் ஏராளமான ரசிகர்கள் மாரி செல்வராஜ்ஜுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அதேபோல், ஏஆர் ரஹ்மானின் இசையும் தரமாக இருந்ததாக பாராட்டியுள்ளனர்.
அதேநேரம் வடிவேலு இல்லாமல் மாமன்னன் சக்சஸ் மீட்டா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேபோல், இரண்டே நாளில் இவ்வளவு அவசரமாக மாமன்னன் வெற்றி விழா கொண்டாட என்ன காரணம் எனவும் கேட்டு வருகின்றனர். இதனிடையே முதல் வாரம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள மாமன்னன் இனிவரும் நாட்களிலும் வசூலில் குறை வைக்காது என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.