சென்னை: மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் பக்ரீத் ஸ்பெஷலாக கடந்த 29ம் தேதி வெளியானது.
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனம் பெற்றுள்ள மாமன்னன், பாக்ஸ் ஆபிஸிலும் வசூலில் மாஸ் காட்டி வருகிறது.
இந்நிலையில், மாமன்னன் படத்தில் பரியேறும் பெருமாள் ஜோதி கேரக்டர் உள்ளதாக ரசிகர்கள் விவாதத்தை கிளப்பியுள்ளனர்.
மாமன்னன் படத்தில் பரியேறும் பெருமாள் ஜோ:பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தொடர்ந்து தனுஷின் கர்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது மாமன்னனாக கம்பேக் கொடுத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார்.
ஏஆர் ரஹ்மான் இசையில் ரெட் ஜெயன்ட் தயாரித்துள்ள மாமன்னன், கடந்த 29ம் தேதி வெளியானது. முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்துள்ள மாமன்னன் படம், இதுவரை 15 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. உதயநிதியின் கடைசிப் படமாக உருவாகியுள்ள மாமன்னன் சமூக நீதியை பேசியுள்ளது.
மக்கள் பிரதிநிதியான சட்டமன்ற உறுப்பினரும் கூட சாதிய அதிகாரத்தால் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதே மாமன்னன் முன் வைக்கும் அரசியலாகும். மாமன்னன் கேரக்டரில் வடிவேலுவும், வில்லன் ரோலில் ஃபஹத் பாசிலும் நடித்துள்ளனர். வடிவேலுவின் மாமன்னன் கேரக்டர் முன்னாள் அதிமுக அமைச்சரும் சபாநாயகருமான தனபால் தான் என விவாதம் எழுந்துள்ளது.
அவருக்கு எதிராக நடந்த உண்மைச் சம்பவங்கள் தான் மாமன்னன் படத்தின் கதை எனவும், அவர் தான் ரியல் மாமன்னன் எனவும் சொல்லப்படுகிறது. இதனிடையே இப்படத்தில் ஃபஹத் பாசிலின் மனைவி பாத்திரம் அதிக கவனம் ஈர்த்துள்ளது. ஜோதி என்ற இந்த கேரக்டரில் ரவீனா ரவி நடித்துள்ளார். எந்த வசனமும் இல்லாமல் அமைதியாகவே வந்து செல்லும் இந்த ஜோதி பாத்திரம் குறித்து ரசிகர்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.
அதாவது மாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாள் படத்தில் ஜோ என்ற ஜோதி கேரக்டரில் கயல் ஆனந்தி நடித்திருப்பார். கதிருக்கு ஜோடியாக நடித்த கயல் ஆனந்தியின் ஜோ கேரக்டர் ரசிகர்களிடம் பயங்கரமாக ரீச் ஆகியிருந்தது. இந்தப் படத்தில் பரியனும் ஜோவும் பிரிந்துவிடுவதாக க்ளைமேக்ஸ் இருக்கும். அந்த ஜோ பாத்திரம் தான் மாமன்னன் படத்தில் ஃபஹத்தின் மனைவியான ஜோதி கேரக்டர் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மாமன்னன் படத்தில் ஜோதியின் கேரக்டரும் அப்படியே பரியேறும் பெருமாள் ஜோவை நகலெடுத்துள்ளது. அதாவது ஜாதிய பெருமிதம் இல்லாத மென்மையான கேரக்டராக வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதன் மூலம் பரியேறும் படத்தில் பரியனை பிரியும் ஜோ, பின்னாளில் மாமன்னன் ரத்னவேலுவை திருமணம் செய்திருந்தால் எப்படி இருக்கும் என மாரி செல்வராஜ் காட்டியிருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.